உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி திருமணங்களை இந்தியாவில் நடத்துங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி திருமணங்களை இந்தியாவில் நடத்துங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியாவில் தீவிரவாதத்தை முழுபலத் தோடு ஒடுக்கி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வானொலியில் 107-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

நவம்பர் 26-ம் தேதியை நாம் மறக்க முடியாது. இந்த நாளில்தான் மும்பையில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். தாக்குதலின்போது உயிர்த் தியாகம் செய்த துணிச்சலான இதயங்களை நினைவுகூர்கிறோம். இந்தியாவின் துணிச்சலால் சோதனைகளை, சாதனைகளாக்கி வருகிறோம். முழுபலத்துடன் தீவிரவாதத்தை ஒடுக்கி வருகிறோம்.

கடந்த 1949-ம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நாளைஅரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று வரை, அரசியலமைப்பில் 106 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 44-வது திருத்தத்தின் மூலம், அவசர நிலை காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டன.

கடந்த மாதம் ‘மனதின் குரல்' வாயிலாக உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க அழைப்பு விடுத்தேன். இதன்படி கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் உள்நாட்டு தயாரிப்புகள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி, சாத் பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் ரூ. 4 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று உள்ளது.

பண்டிகை காலங்களில் மட்டுமல்ல அனைத்து காலங்களிலும் இந்திய தயாரிப்புகளை மட்டுமேவாங்க உறுதியேற்க வேண்டும். தற்போது திருமண சீசன் தொடங்கிஉள்ளது. இந்த காலத்தில் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கலாம். திருமண விழாவுக்காக பொருட்களை வாங்கும் போது, இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும்.

சில குடும்பங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று திருமணங்களை நடத்தி வருகின்றன. வெளிநாட்டில் திருமண விழாவை ஏன் நடத்த வேண்டும். இந்திய மண்ணில் திருமண விழாக்களை கொண்டாடினால், இந்தியா பலன் அடையும். இதை சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் பொருட்களை வாங்கி உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகம் வலுவடையும்.

புத்திசாலித்தனம், புதிய சிந்தனை, புதுமை ஆகியவை இன்றைய இந்திய இளைஞர்களின் அடையாளமாகும். இதை உறுதி செய்யும் வகையில் கடந்த 2022 -ம்ஆண்டில் இந்தியர்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அடல் டிங்கரிங் லேப், அடல் இன்னோவேஷன் மிஷன், கல்லூரிகளில் இன்குபேஷன் சென்டர்கள்,ஸ்டார்ட்-அப் இந்தியா பிரச்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் புதுமை முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று ‘நீர் பாதுகாப்பு'. தண்ணீரைச் சேமிப்பது என்பது உயிரைக் காப்பாற்றுவதற்கு சமம்இதை கருத்தில் கொண்டு நாட்டின்ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அமிர்தசரோவர்' நீர்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா உருவாக்கிய 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அமிர்த சரோவர்கள்' எதிர்கால தலைமுறைக்கு நிறைவான பலன்களை அளிக்கும்.

புகைப்பட விருது: நவம்பர் 27-ம் தேதி கார்த்திகை பூர்ணிமா பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘தேவ தீபாவளி' கொண்டாடும் காசி மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தியாவில் திருவிழாக்கள் தொடர்பான புகைப்பட போட்டியை நடத்த மனதின் குரல் வாயிலாக அழைப்பு விடுத்தேன். இதன்படி மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் புகைப்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சிறந்த புகைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கொல்கத்தாவில் வசிக்கும் ராஜேஷ் தர்ஜி, சரக்மேளாவில் பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளரின் அற்புதமான புகைப்படத்துக்காக விருதை வென்றார். வாரணாசியில் ஹோலியை காட்சிப்படுத்தியதற்காக அனுபம் சிங் விருதினை பெற்றார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா விழா தொடர்பான புகைப்படத்துக்காக அருண்குமார் நளிமேலா விருதினை வென்றார்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in