

கடல்சார் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் (ஆசியான்) சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இதையடுத்து டெல்லி வந்துள்ள அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மதிய விருந்த அளித்தார்.
இதையடுத்து, இந்தியா-ஆசியான் அமைப்பு உருவாகி 25 ஆண்டுகள் முடிந்ததைக் குறிக்கும் வகையில் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நீங்கள் அனைவரும் கூட்டாக இங்கு வந்திருப்பது இங்குள்ள 125 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் இதயத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 25 மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோல முதலீடும் அதிகரித்து வருகிறது. இந்த வர்த்தக உறவை மேலும் அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து கலந்துரையாடுவோம். இவ்வாறு அவர் தரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, தாய்லாந்து, சிங்கப்பூர் பிரதமர்கள் உட்பட 6 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஆசி யான் தலைவர்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசியான் அமைப்பில் தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் புருனே ஆகியவை உறுப்பினராக உள்ளன.