பிரதமர் மோடி
பிரதமர் மோடி

“இந்தியா உலக நாடுகளின் நண்பன்” - தெலங்கானாவில் பிரதமர் மோடி பெருமிதம்

Published on

கன்ஹா: “நாடு வளர்ச்சி அடைவதன் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இந்த முறை தெலங்கானாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமையும், தாமரை மலரும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, “வளர்ந்து வரும் நாடான இந்தியா தன்னை விஸ்வ மித்திரனாக (உலக நாடுகளின் நண்பனாக) பார்க்கிறது. கொரோனா காலகட்டத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு உறுதுணையாக நின்ற விதம், உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு நட்பு நாடு என நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா ஒரு நட்பு நாடு என உலக நாடுகளே சொல்கின்றன. இந்தியாவை அடிமைப்படுத்தியவர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற அதன் பாரம்பரியம்மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற பல குறிப்பிடத்தக்க மரபுகள் இருந்தன. அவையும் தாக்கப்பட்டன, இது நாட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஆனால் காலம் மாறுகிறது, அதற்கேற்றாவாறு இந்தியாவும் மாறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை எல்லா வகையிலும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பாடுபட்டுள்ளது. யோகா, ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, இன்று இந்தியா ஒரு அறிவு மையமாக பேசப்படுகிறது. இந்தியாவின் முயற்சியால், ஐநா சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரின் தேவைகளையும், விருப்பத்தையும் நிறைவேற்றுவதுதான் அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள். முன்பெல்லாம் மக்கள் பலன்களைப் பெற அரசு அலுவலகங்களை நோக்கி ஓட வேண்டியிருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நாடு வளர்ச்சி அடைவதன் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இந்த முறை தெலங்கானாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமையும், தெலங்கானாவில் தாமரை மலரும்” எனத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in