

மஹ்பூப்நகர்: கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் செய்த ஊழலுக்கு அளவே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானாவின் நாராயண்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “வரவிருக்கும் தேர்தல் எங்களுடைய வேட்பாளரை எம்எல்ஏ ஆக்குவதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். 10 ஆண்டுகால ஆட்சியில் தெலங்கானாவில் முதல்வர் கேசிஆர் மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி தருவதாகவும் கே.சி.ஆர் அரசு கூறியது. அது தற்போது நிறைவேற்றப்பட்டதா? பட்டயக் கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். அது நிறைவேற்றப்பட்டதா?
நாராயண்பேட்டையில் ஜவுளிப் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளோம். இது நெசவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதி. ஆனால் கேசிஆர் அரசு நெசவாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. கே.சி.ஆர் அரசு மீனவர்களுக்காக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. பாஜக அரசு அமைந்த பிறகு, அனைத்து மீனவர்களின் நலனுக்காகவும் ரூ.1000 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இறுதியில் பிஆர்எஸ் கட்சிக்கு மாறிவிடுவார்கள்” என்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தெலங்கானா பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மொத்த வாக்குப் பங்கில் 47.4 சதவீதத்தைப் பெற்று மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களை வென்றது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.