Published : 26 Nov 2023 05:03 AM
Last Updated : 26 Nov 2023 05:03 AM
பெங்களூரு: இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் 'தேஜஸ்' இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. பெங்களூருவில் நேற்று காலை பிரதமர் மோடி அந்த விமானத்தை பார்வையிட்டார். பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன் பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு, வெற்றி சின்னத்தையும் அவர் காட்டினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணித்தேன். இதில் பயணித்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. நமது சுயசார்பு திறன் எனக்கு பெருமிதத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தேஜஸ் விமானத்தில் பயணித்த புகைப்படங்கள், வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT