

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மதுரா மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலினி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹேமமாலினியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மதுராவில் ஸ்ரீஜி பாபா சரஸ்வதி வித்யா மந்திர் என்ற பள்ளியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி நேரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாணவர்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து ஹேமமாலினி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி திரேந்திர சச்சன் கூறினார்.
“பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்றிருந்தாலும் பள்ளி வளாகத்தில் நடத்தப்படுவதாகவோ, அதில் மாணவர்கள் பங்கேற்பது குறித்தோ விண்ணப்பத்தில் கூறவில்லை. பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் பிரச்சாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிமீறல்” என்றார் அவர்.
தேர்தல் பிரச்சாரத்தில் அதிக வாகனங்களை பயன்படுத்தியது மற்றும் தேர்தல் செலவுகளை மறைத்தாக ஹேமமாலினி மீது ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.