Published : 31 Jan 2018 06:34 PM
Last Updated : 31 Jan 2018 06:34 PM

ராகுல் காந்தி விலை உயர்ந்த ஆடை அணிந்தாரா? - பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி

மேகாலயா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விலை உயர்ந்த ஆடை அணிந்து வந்ததாக பாஜக புகார் கூறி வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஷில்லாங் நகரில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, நீல நிற பேண்ட்டும், கறுப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

 

 

 

கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய இந்த ஜாக்கெட் விலை உயர்ந்தது. ஜாக்கெட்டின் விலை சுமார் 63 ஆயிரம் ரூபாய் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. மேகாலயா மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியன் போட்டோவுடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘‘மேகாலயா காங்கிரஸ் அரசு கடுமையான ஊழல் செய்து கருவூலத்தை உறிஞ்சி, அதன் மூலம் பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கறுப்பு பணத்தில் இதனை ராகுல் அணிந்துள்ளாரா? மேகாலயாவில் திறமையற்ற காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு இது ஒப்புதலா?’’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்திரி ‘‘ஊழலில் திளைக்கும் மத்திய பாஜக அரசுக்கு, ராகுல் காந்தியை கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இல்லை. அவருக்கு ஆதரவ பெருகி வரும் நிலையில், இதனை பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தி அணிந்திருந்த ஜாக்கெட் 700 ரூபாய்க்கு கூட வாங்க முடியும். ஆனால் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அணியும் விலை உயர்ந்த ஆடைகள் பற்றிதான் விமர்சனம் உள்ளது. அவர் அணிந்திருந்த ஆடையை 4.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதை மறந்து விட்டு பாஜகவினர் பேசுகின்றனர்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x