

புதுடெல்லி: ‘‘பயிற்சி விமானங்களை மிக குறைந்த விலைக்கு லஞ்சமாக பெற்று, அதை பயிற்சி நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்ட சிவில் விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரி கேப்டன் அனில் கில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற சூழலை நம் நாட்டில் பல இடங்களில் காண முடிகிறது. லஞ்சம் பெறுவதில், சில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் மிஞ்சி விடுகின்றனர். மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையின் ஏரோ ஸ்போர்ட்ஸ் இயக்குநரகத்தில் தலைமை இயக்குநராக இருந்தவர் கேப்டன் அனில் கில். இவர் விமான பயிற்சி இயக்குநரகத்துக்கு பல ஆண்டுகளாக தலைமை வகித்தார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் நாட்டில் உள்ள விமான பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன.
விமான பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்று சலித்து விட்டதால், பயிற்சி விமானத்தையே லஞ்சமாக கேட்கத் தொடங்கினார். அதாவது லஞ்சம் கொடுப்பதற்கு பதில், மிக குறைந்த விலைக்கு பயிற்சி விமானத்தை தனக்கு விற்றுவிட வேண்டும் என விமான பயிற்சி நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அவர்களும் வேறு வழியின்றி, லஞ்சம் கொடுப்பதற்கு பதில் பயிற்சி விமானத்தை குறைந்த விலைக்கு அனில் கில்லுக்கு கொடுத்துள்ளனர்.
அந்த பயிற்சி விமானங்கள் அனில் கில்லின் தாய் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயரில் உள்ள விமான நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி விமானங்களை, மற்ற விமான பயிற்சி நிறுவனங்களுக்கு கேப்டன் அனில் கில் வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு ரூ.90 லட்சம் வருவாய் ஈட்டி வந்துள்ளார். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான பயிற்சி நிறுவனம் ‘ரெட் பேர்ட்’. இங்குதான் அனில் கில் லஞ்சமாக பெற்ற விமானங்கள் பல குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. சமீபத்தில் ரெட் பேர்ட் நிறுவனத்தில் இரண்டு பயிற்சி விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதையடுத்து ரெட் பேர்ட் நிறுவனத்தில் விமான பயிற்சிகளை நிறுத்த கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு மீண்டும் சான்றிதழ் அளிப்பது குறித்து விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் பரிசீலித்து வருகிறது.
கேப்டன் அனில் கில்லின் இந்த முறைகேடு குறித்து ஒருவர், சிவில் விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதினார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது அனில் கில், ஏரோ ஸ்போர்ட்ஸ் இயக்குநர் பொறுப்பில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறுகையில், ‘‘விமான போக்குவரத்து துறையில் முறைகேடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. ஊழல் நடந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அனில் கில், அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால், விமான போக்குவரத்து துறையில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய ஊழலாக இது இருக்கும்’’ என்றார்.
பயிற்சி விமானங்களை கேப்டன் அனில் கில், லஞ்சமாக பெற்று வருவதாக கடந்த 2021-ம் ஆண்டே மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. அப்போது இது குறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிக்கு போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. தற்போது அனில் கில் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.