Published : 24 Nov 2023 05:10 AM
Last Updated : 24 Nov 2023 05:10 AM
உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் 51 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெருங்கிவிட்டனர். தொழிலாளர்கள் எந்நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மாநில சாலை மற்றும்போக்குவரத்து துறை மேற்கொண்டது. இங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால், சுரங்கப் பாதைக்குள் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இவர்களை மீட்கும் முயற்சி கடந்த 12 நாட்களாக நடந்து வருகிறது.
சுரங்கப் பாதைக்குள் ‘ஆகர்’ என்ற அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மூலம் 51 மீட்டர் தூரத்துக்கு, பக்கவாட்டில் குழி தோண்டி, இரும்புக் குழாய்களை பொருத்தும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுரங்கத்தில் தொழிலாளர்கள் 57 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவே மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12 மீட்டர் தூர இடைவெளி இருக்கும்போது, குழி தோண்டும் பணியில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால், பணிகள் சற்று தாமதமாகின.
சுமார் 14 மணி நேரம் ஆகர்இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, 6 மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரும்புக் குழாய் வழியாக சுரங்கப் பாதைக்குள் சென்று, தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மீட்பு குழுவின் மருத்துவர் ஒருவரும் உள்ளே செல்கிறார்.
தொழிலாளர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்தால், இரும்பு குழாய் வழியேதவழ்ந்து வெளியேறுவார்கள். இல்லாவிட்டால், 800 எம்எம் இரும்புகுழாய்க்குள் செல்லும் வகையில் குறைந்த உயரத்தில் சக்கரங்களுடன் கூடிய சிறிய ஸ்டிரெச்சர்கள் தயார் நிலையில் உள்ளன. அதில் தொழிலாளர்களை படுக்கவைத்து, சுரங்கப் பாதையில் இருந்து சங்கிலி மூலம் இழுத்து மீட்கப்படுவார்கள் என்று, இப்பணிகளை மேற்பார்வையிடும் பிரதமர்அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆகர் இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இப்பணி மீண்டும் தொடங்க சில மணி நேரங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது. சுரங்கத்தின் மேல் பக்கத்தில் இருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட் பதற்கான முயற்சியும் தீவிரமாக நடக்கிறது.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குனர் அதுல் கர்வால் ஆகியோரும் பணிகளை பார்வையிட்டனர்.
‘‘சுரங்கப் பாதையின் கதவைநெருங்கி, தட்டும் நிலைக்கு சென்றுவிட்டோம். கதவுக்கு அந்த பக்கம் தொழிலாளர்கள் உள்ளனர்’’ எனசர்வதேச சுரங்கப் பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கூறினார். எந்நேரத்திலும் தொழிலாளர்கள் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT