கூட்டுறவு வங்கிப் பணம் மோசடி - கேரள கம்யூனிஸ்ட் முன்னாள் தலைவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு 2 நாள் அனுமதி

கூட்டுறவு வங்கிப் பணம் மோசடி - கேரள கம்யூனிஸ்ட் முன்னாள் தலைவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு 2 நாள் அனுமதி
Updated on
1 min read

கொச்சி: கேரளாவில் கூட்டுறவு வங்கிப் பணம் மோசடி வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மகனை 2 நாட்கள் அமலாக்கத் துறை விசாரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை மாநில கூட்டுறவுத் துறை கண்டறிந்தது.

இதுகுறித்து மாநில குற்றப் பிரிவு போலீஸார் மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். கூட்டுறவு வங்கி மற்றும் முன்னாள் செயலர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இந்த மோசடியில் கூட்டுறவு வங்கியில் தலைவராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர் என்.பாசுரங்கன் முக்கியப் பங்கு வகித்தாக தெரியவந்தது.

ரூ.4.20 கோடி கடன் மோசடி: அவர் கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் தனது நிலத்தைஅடகு வைத்து ரூ.3.20 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளதும் அவரது மகன் அகில்ஜித் ரூ.1 கோடிக்கு மேல் 8 முறை கடன் வாங்கியுள்ளதும், அவர்கள் இருவரும் ஒரு பைசா கூட திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசுரங்கன் நீக்கப்பட்டார். அவர் மீதும், அவரது மகன் அகில்ஜித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரிடம் அமலாக்கத் துறையினர் 2 முறை விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் இருவரையும் மூன்றாவது முறையாக கொச்சியில் உள்ள தங்கள் அலுவகத்திற்கு அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதையடுத்து இருவரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

பாசுரங்கள், அகில்ஜித் ஆகியஇருவரும் நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரிடம் இருந்தும் பல்வேறுஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இருவரையும் ஆதாரங்களுடன் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதையடுத்து இருவரையும் 2 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in