பாஸ்போர்ட் புதுப்பிப்பு அனுமதி | பணமோசடி குற்றச்சாட்டை காரணம் காட்ட கூடாது: மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

பாஸ்போர்ட் புதுப்பிப்பு அனுமதி | பணமோசடி குற்றச்சாட்டை காரணம் காட்ட கூடாது: மும்பை நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

மும்பை: பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான அனுமதியை மறுப்பதற்கு பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை காரணமாக காட்ட முடியாது என மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் அவரது மகன் சலில் தேஷ்முக் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சலில் தேஷ்முக்கின் பாஸ்போர்ட்டையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், சலில் தேஷ்முக்கின் பாஸ்போர்ட் கடந்த 2022 ஜனவரியில் காலாவதியானது. இதையடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்க உள்ளதால் அமலாக்கத் துறை தனது பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க உத்தரவிடக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சலில் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனு நீதிபதி ஆர்.என். ரோகடே அமர்வில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சலில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவர் தலைமறைவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் அதனால் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான அனுமதியை மறுப்பதற்கு பணமோசடி தடுப்பு சட்டப் பிரிவு 4-ன் கீழ் வழக்கு தொடர்ந்ததை மட்டும் போதிய காரணமாக கூற முடியாது. எனவே, சலில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக அவரிடம் பழைய பாஸ்போர்ட்டை அமலாக்கத் துறை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், புதுப்பித்த பிறகு சலில் தனது புதிய பாஸ்போர்ட்டை அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்”என்று தீர்ப்பளித்தார்.

அனில் தேஷ்முக் தனது பதவியை தவறாக பயன்படுத்தி மும்பையில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ரூ.4.70 கோடியை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in