அரசு வீட்டை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்

அரசு வீட்டை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

டெல்லியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீடுகளில் குடியேறிய முன்னாள் எம்.பி.க்கள் சிலர், தங்கள் பதவியை இழந்த பின்பும் காலி செய்யாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மொத்தம் 20 முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கும், 120 முன்னாள் எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, முன்னாள் எம்.பி.க்கள் தங்களின் வீடுகளை காலி செய்ய ஜூன் 26-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

காலக்கெடு

பின்னர், முன்னாள் எம்.பி.க்கள் சிலரின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஜூலை 26-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பலர் வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர். இதற்கு மேல் காலக்கெடு நீட்டிப்பு எதையும் செய்ய முடியாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்களை அவர்கள் தங்கியிருக்கும் அரசு பங்களாக்கள், வீடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவ டிக்கையை மத்திய அரசு தொடங் கியுள்ளது. நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்திற்குள் முன்னாள் எம்.பி.க்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக இருந்து, தற்போது பதவியை இழந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள், பங்களா வீட்டிலிருந்து, எம்.பி.க் களுக்கு ஒதுக்கப்படும் வீட்டிற்கு மாற வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி குடியிருக்கும் பங்களா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிரஞ்சீவி இன்னமும் பங்களாவை காலி செய்யவில்லை.

அமைச்சர் பதவியை இழந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏ.கே.அந்தோனி, ராஜீவ் சுக்லா ஆகியோர் தங்களின் பங்களா வீட்டை காலி செய்துவிட்டு, எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டிற்கு மாற வேண்டும்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தற்போது டெல்லியில் உள்ள மாநில அரசுகளின் இல்லங்களிலும், அசோகா ஹோட்டலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in