Published : 19 Jan 2018 10:18 AM
Last Updated : 19 Jan 2018 10:18 AM

லஷ்கர் தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ: காஷ்மீரில் கலவரத்தைத் தூண்ட நிதி அளித்ததாக புகார்

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தது, பிரிவினையைத் தூண்டியது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவர் ஹபீஸ் சயீது, ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சயத் சலாவுதீன் மற்றும் பிரிவினைவாதத் தலைவர்கள் மீது தேசிய புலனாய்வுக் கழகம் (என்ஐஏ) நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

காஷ்மீரில் தீவிரவாத கமாண்டராக இருந்த புர்கான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின்னர் மாநிலத்தில் பயங்கர கலவரம் தூண்டிவிடப்பட்டது. பல மாதங்கள் கல்வீச்சு,வன்முறை நடந்தது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிரிவினைவாதிகள் 12 பேர் தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.

1300 பக்கங்கள்

இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 6 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியும். இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கலவரத்தைத் தூண்டி விட்டது, கல்வீச்சு தாக்குதலை தொடர்ந்து நடத்த தூண்டியது தொடர்பாக 1300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்ஐஏ நேற்று கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தருண் ஷெராவத்திடம் தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் கூறும்போது, ‘‘இதுவரை 300 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 950-க்கும் மேற்பட்ட ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, விசாரணையைத் தொடருவதற்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தது.

அதில் லஷ்கர் தீவிரவாத தலைவர் ஹபீஸ் சயீது, ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சயத் சலாவுதீன் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கூறிய இருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் பிரிவினைவாதத் தலைவரும் ஹூரியத் தலைவருமான சயத் அலி ஷா கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா, ஹூரியத்தின் மிதவாத பிரிவு தலைவர் மிர்வெய்ஸ் உமர் பரூக்கின் உதவியாளர் அப்தாப் அகமது ஷா பிரபல வர்த்தகர் ஜாகூர் அமது வடாலி உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x