

மீட்புப் பணியில் நாளைக்குள் நல்ல செய்தி கிடைக்கும்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ரவி எஸ் பதானி கூறுகையில், "மீட்பு நடவடிக்கை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. நாங்கள் இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். எப்போது மீட்கப்படுவார்கள் என்பதற்கான காலக்கெடுவை வழங்குவது கடினம்" என்றார்.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு:தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிச.4 வரை நீதிமன்றக் காவல்: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-வது முறையாகும்.
அமைச்சர் எ.வ.வேலுவின் மருத்துவக் கல்லூரியில் சோதனை: தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
ஸ்மார்ட் சிட்டி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடித்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, அதிகாரிகளை விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
“156 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்”: "வழக்கமாக ராஜஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஆட்சி மாறுவது வழக்கம். ஆனால், இம்முறை அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படாது. ஏனெனில், காங்கிரஸ் அரசு தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.இந்த தேர்தலில், 156 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்" என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை அசோக் கெலாட் அரசு சீரழித்துவிட்டது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.
"காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு எதிரானது. குறிப்பாக, நாட்டின் பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் இதுவரை எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஆனால், பாஜக, பழங்குடி மக்கள் நலனுக்கு என தனி அமைச்சரவையே உருவாக்கியது. அதோடு, பட்ஜெட்டில் அவர்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியது" என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏர் இந்தியவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ: பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விதிமுறைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் கடைபிடிக்க தவறிய காரணத்துக்காக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் கவுதம் கம்பீர்: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் மீண்டும் இணைந்துள்ளார். இந்த முறை அணியின் ஆலோசகராக அவர் செயல்பட உள்ளார். இந்த அறிவிப்பை கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் அறிவித்துள்ளார்.
காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.