Last Updated : 22 Nov, 2023 07:07 AM

 

Published : 22 Nov 2023 07:07 AM
Last Updated : 22 Nov 2023 07:07 AM

ஹலால் சான்றிதழ் முறைக்கு உ.பி. அரசு தடை: நீதிமன்றம் செல்ல முஸ்லிம் ஜமாத் முடிவு

புதுடெல்லி: ஹலால் சான்றிதழ் முறைக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜமாத்-எ-உலாமா ஹிந்த் முடிவு செய்துள்ளது.

முஸ்லிம் மார்க்க சட்ட விதிகளின்படி, ‘ஹலால்' என்பது அனுமதிக்கப்பட்டதாகவும், ‘ஹராம்' என்பது தடை செய்யப்பட்டதாகவும் பின்பற்றப்படுகிறது. இதற்கான தரச் சான்றிதழ்களை உ.பி.யில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் அளித்து வருகின்றன. இச்சூழலில், பாஜக ஆளும் உ.பி.யில் இந்த ஹலால் தரச் சான்றிதழ்கள் அளிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாத்-எ-உலாமா ஹிந்த் (மதானி பிரிவு) நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பு ‘ஹலால் டிரஸ்ட்’ எனும் ஒரு அறக்கட்டளை மூலம் உ.பி.யில் ஹலால் சான்றிதழ்களை அளித்து வருவதும் இதற்கான காரணம் ஆகும்.

இதுகுறித்து ஹலால் டிரஸ்டின் முதன்மை அதிகாரி மவுலானா நியாஸ் ஃபரூக்கி கூறும்போது, “இந்தியாவின் ஹலால் சான்றிதழ்முறை சர்வதேச அளவில் கடந்த2010 முதல் தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் நிறுவனமான, விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளஇந்திய தூதரகங்களின் வழிகாட்டுதலின்படி ஹலால் சான்றிதழ் அமைப்புகள் செயல்படுகின்றன. இதனால் நாங்கள் அளிக்கும் ஹலால் சான்றிதழ்களை, பலநாடுகளின் அமைப்புகளும், அரசுகளும் அங்கீகரிக்கின்றன.

நாங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பயன்பாட்டிற்கு பெரும் உதவுகின்றன. இந்தியாவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் முறை கட்டாயம் என் மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹலால் சான்றிதழ் பெற்ற இறைச்சியில் மது மற்றும் கொழுப்பு இல்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதிக்கான வளர்ச்சியில் இந்த ஹலால் சான்றிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இது, அசைவ உணவுகளுக்கு மட்டுமின்றி சைவ உணவு மற்றும்இதரப் பொருட்களுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இதனால், ஹலால் சான்றிதழ் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் இல்லை” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x