

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வினாத்தாள்களை கசியவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோட்டா நகரில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவுகளை மீண்டும் அழித்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
தனது ஆட்சிக் காலத்தில் அரசுப் பணிகளுக்காக நடந்ததேர்வுகளுக்கான வினாத்தாள்களை காங்கிரஸ் அரசு விற்பனைசெய்தது. அனைத்து தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் காங்கிரஸ் அரசு விற்றது. இதனால்ஏராளமான இளைஞர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நீடித்தால் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாக போய்விடும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப்இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) பேரணிகள் காங்கிரஸ் அரசின்அனுமதியுடன் ராஜஸ்தானில் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இங்கு முழு போலீஸ் பாதுகாப்புடன் பிஎஃப்ஐ பேரணி நடத்தப்படுகிறது. அத்தகைய காங்கிரஸ் அரசு எவ்வளவு காலம் ஆட்சியில் நீடிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது ராஜஸ்தானில் சேதத்தைஏற்படுத்தும். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர். ராஜஸ்தான் மக்களிடம் இவ்வளவு கடுமையான கோபத்தை நான்இதற்கு முன்பு பார்த்ததில்லை. ராஜஸ்தான் இளைஞர்கள் காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெற விரும்புகின்றனர்.
ராஜஸ்தானின் பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 2018ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இறுதியில் பிஎஸ்பி எம்எல்ஏக் கள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் அசோக் கெலாட் முதல்வ ராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.