Published : 03 Jan 2018 03:39 PM
Last Updated : 03 Jan 2018 03:39 PM

மகாராஷ்டிர கலவரத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்புகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில், பீமா கோரேகாவில் நடந்த மோதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பீமா கோரேகாவில் நேற்றுமுன்தினம் (திங்கள்) போர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது அவர்கள் மீது எதிர் தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதை கண்டித்து மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் இன்று பெரும் அமளியை கிளப்பியது. மக்களவையில் இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘மகாராஷ்டிராவில் தலித் மற்றும் மராத்தா பிரிவினரிடையே மோதலை உருவாக்கி கலவரம் நடைபெறுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? இதுபற்றி அவர் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் பேசுகையில் ‘‘சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸ், மகாராஷ்டிர கலவரத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது’ எனக்கூறினார்.

அப்போது அமைச்சர் அனந்தகுமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதுபோலவே மாநிலங்களவையிலும், இந்த விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டு அவை பிற்கபல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x