உத்தராகண்ட் சுரங்க விபத்து முதல் இந்திய அணி வீரர்களுக்கான பிரதமரின் ஆறுதல் வரை - செய்தி தெறிப்புகள் @ 10, நவ.21, 2023

உத்தராகண்ட் சுரங்க விபத்து முதல் இந்திய அணி வீரர்களுக்கான பிரதமரின் ஆறுதல் வரை - செய்தி தெறிப்புகள் @ 10, நவ.21, 2023
Updated on
3 min read

உத்தராகண்ட் சுரங்க விபத்து: உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "உத்தரகாசியில் உள்ள சில்க்யாராவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் படம் முதன்முறையாக கிடைத்துள்ளது. அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை விரைவில் பத்திரமாக வெளிக்கொண்டுவர அனைத்தை முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

முதன்முறையாக, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமரா மூலம் பேசி நலம் விசாரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இதனிடையே, உத்தராகண்ட் சுரங்க விபத்து குறித்து செய்திகளை வழங்கும் செய்தி தொலைக்காட்சிகள், பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் செய்தியாக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு: ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவற்றின் அடையாளமாக காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானின் பரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவை வளர்ந்த நாடாக விடாமல் 3 தீய சக்திகள் தடுத்துக்கொண்டிருக்கின்றன. ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவையே அந்த 3 தீய சக்திகள். இந்த 3 தீய சக்திகளின் அடையாளமாக காங்கிரஸ் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் 'எக்ஸ்-ரே' போன்றது: ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் 'எக்ஸ்-ரே' போன்றது. அந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் அவசியம்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் வல்லப்நகரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று கூறியுள்ளார்.

தெலங்கானாவில் காங்கிரசுக்கு 20-க்கும் குறைவான இடங்கள் - முதல்வர் கேசிஆர் நம்பிக்கை: தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 20-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்: ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்களால் எட்ட முடியும். நான் தமிழகத்துக்காக மட்டும் இதைக் கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் கூறுகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஒன்றாக முன்னேறி செல்லுங்கள் - இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்த வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், சோகமாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, நீங்க எல்லாரும் மொத்தமா 10 ஆட்டங்களையும் ஜெயிச்சு வந்துருக்கீங்க. விடுங்க தம்பிகளா, நாடே உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறது.

கவலைப்படாதீங்க. நீங்கள் எல்லாரும் சிறப்பாக முயற்சி செய்தீர்கள். விடுங்க பார்த்துக்கலாம். இதுபோல நடக்கும், சிரித்துக் கொண்டே இருங்கள். எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள். இந்த நேரத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் பலமாக இருக்க வேண்டும். நாடு உங்களை எதிர்நோக்கி இருக்கிறது என இந்திய வீரர்களிடம் பிரதமர் மோடி பேசி ஊக்கப்படுத்தினார். மேலும் மொகமது ஷமியை கட்டியணைத்து பிரதமர் ஆறுதல் கூறினார்.

தமிழக மீனவரை மீட்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மன்னிப்புக் கேட்க முடியாது: மன்சூர் அலிகான்: நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால் அது முடியாது என மன்சூர் அலி கான் குறித்து நடிகை குஷ்பூ காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்: உதயநிதி நீட் தேர்வு பிரச்சினை என்பது இளைஞரணியின் பிரச்சினை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்சினை. நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது: ஹமாஸ் தலைவர் தகவல் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா ஒரு அற்புதமான மொழி - கோவா திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி: இந்தியாவின் 54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் திங்கள்கிழமை தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, புதியதோர் உலகத்துக்கு அழைத்துச் சென்று, புது வகையான அனுபவத்தை கொடுக்கும் சினிமா ஒரு அற்புதமான ஊடகம் என்று கூறியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in