Published : 17 Jul 2014 12:08 PM
Last Updated : 17 Jul 2014 12:08 PM

கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி பதில் மனு

‘கடந்த 1974, 76-ஆம் ஆண்டுகளில் இந்தியா இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது என்பதால், கச்சத்தீவு தற்போதும் இந்தியாவிடம்தான் உள்ளது’ என்று திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர் பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்திருந்தன. அதற்கு மனுதாரர் என்ற முறையில் கருணாநிதி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவை இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுமே வரலாற்று ரீதியாக சொந்தமாக கொண்டிருக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள பதில் தவறானது. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயம் தமிழக மீனவர் ஒருவரால் கட்டப் பட்டது. படகு கவிழ்ந்தபின், நீந்திச் சென்று உயிர் பிழைத்த ஒரு மீனவர் 1917-ம் ஆண்டு அந்த ஆலயத்தை கட்டினார்.

ஆங்கிலேயர் காலத்தில் கச்சத் தீவு ராமநாதபுரம் ஜமீன்தாரின் கீழ் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின், ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் இருந்தது. கச்சத்தீவின் சர்வே எண் 1250. இது, 1972-ம் ஆண்டு தமிழக அரசிதழிலேயே வெளியாகி உள்ளது. ஜமீன்தார் கச்சத்தீவை குத்தகைக்கு விட்ட தற்கான ஆவணங்களும் உள்ளன.

கிளிப்பிள்ளை போல்…

ஆங்கிலேய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே கச்சத்தீவு பிரச்சினைக்குரிய நிலமாக இருந்தது என்பதும் தவறானது. ஜமீன்தார் உரிமை அடிப்படையில், கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்த மானது என்பதை 1803-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு உறுதி செய்துள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு அட்டர்னி ஜெனரல் அளித்த கருத்தை மத்திய அரசு கிளப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப கூறி வருகிறது. இதற்கு உறுதியான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.

கடந்த 1974-ம் ஆண்டு போடப் பட்ட ஒப்பந்தம் மற்றும் 1976-ம் ஆண்டு கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் ஆகியவை மூலம், இந்தியா இலங்கை இடையே எல்லை வகுக்கப்பட்டதில் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெறும் கடிதப் போக்குவரத்து மற்றும் ஒப்பந்தம் வழியாக நாட்டின் எல்லையை வரையறுக்க முடியாது.

நாட்டின் எல்லையை மாற்றுவது என்றால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கச்சத்தீவு விஷயத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எல்லை வரையறையில் என்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதை பெருபரி வழக்கில் (1960) உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, தற்போது கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான். சட்டப்படி செல்லாத ஒரு ஒப்பந்தத் தின் மூலம், கச்சத்தீவு இலங் கைக்கு சொந்தமானது என்று கூற முடியாது.

விடுதலைப்புலிகள் விவகாரம்

கடந்த 1980-ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலி கள் பிரச்சினையால் இந்த விவகாரம் திசை திரும்பியது. ஆனால், 2009-ம் ஆண்டு நிலைமை சீரடைந்த பின்பும் மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படவில்லை. இந்த உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x