Last Updated : 09 Jan, 2018 08:53 AM

 

Published : 09 Jan 2018 08:53 AM
Last Updated : 09 Jan 2018 08:53 AM

ஆன்மீக அரசியலில் இறங்கிய மம்தா

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒரு முஸ்லிம் ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் சுமார் 25 சதவீதம் உள்ளனர். சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் மம்தாவுக்கு முஸ்லிம் வாக்குகள் பெருமளவில் கிடைத்து விடுகின்றன. இதனால் அவர் இந்து வாக்குகள் மீது தனி கவனம் செலுத்தியதில்லை.

ஆனால் மம்தாவின் நடவடிக்கையில் குஜராத் தேர்தலுக்கு பிறகு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜகவுக்கு சமீபத்திய தேர்தலில் காங்கிரஸ் பெரும் சவாலாக இருந்தது. இதில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி, சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் குஜராத்தில் சுமார் 25 கோயில்களுக்கு ராகுல் விஜயம் செய்ததும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு, ராகுல் பாணியை மம்தா கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

பிர்பும் மாவட்டத்தில் மாநில அளவில் புரோகிதர்கள் மாநாட்டை மம்தா நடத்த உள்ளார். இது அவரது ஆன்மீக அரசியலின் அங்கமாகக் கருதப்படுகிறது. இதில் புரோகிதர்களுடன் கோயில்களில் பூஜை செய்யும் பிராமணர்கள் மற்றும் பண்டிதர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா தனது முக்கிய அமைச்சர்களுடன் கலந்துகொண்டு அனைவரையும் கவுரவிக்க உள்ளார். மேற்கு வங்கத்தில் பழம்பெரும் கோயில்களை சீரமைக்கவும் அவர் உதவ முன்வந்துள்ளார்.

இது குறித்து கொல்கத்தாவின் மூத்த பெங்காலி பத்திரிகையாளரான பிரசின்ஜித்தாஸ் குப்தா ‘தி இந்து’விடம் கூறும்போது, “தசரா, விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை போன்ற முக்கிய இந்து பண்டிகைகளில் மம்தா அரசின் தலையீடு இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் சர்ச்சைகளால் மம்தாவுக்கு இந்து வாக்குகள் குறைந்து வருகிறது. அதேநேரம் இந்த வாக்குகளை பாஜக கைப்பற்றி, வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த ஆபத்தை உணர்ந்த மம்தாவுக்கு ராகுல் நல்வழி காட்டியுள்ளார் என்றுதான் கூற வேண்டும்” என்றார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு முதல்முறையாக இந்த முறை 3 எல்எல்ஏக்களும், 2 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர். கடந்த மாதம் சபங் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் பாஜக மூன்றாமிடம் பிடித்தது மம்தாவை கவலை அடையச் செய்துள்ளது. அடுத்து உலுபெரியா மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜனவரி 29-ல் நடைபெறவிருக்கிறது. எனவே, பாஜகவின் இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள ராகுலையும் மிஞ்சும் வகையில் இந்துக்களை கவரும் முயற்சியில் மம்தா இறங்கியுள்ளார். இம்மாதம் ஜனவரி 14, 15-ல் நடைபெறும் கங்கா சாகர் மேளாவின் ஏற்பாடுகளை கடந்த டிசம்பர் 28-ம் தேதி மம்தா தொடங்கி வைத்தார். இதற்குமுன் இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு எந்த முதல்வரும் வந்ததில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x