

தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்குப் பின்னரே தன் வசம் தேங்கிக் கிடந்த மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்புகிறார் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, “ஆளுநர் ரவி தரப்பில் நவம்பர் 13-ஆம் தேதி அவர் மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பியனுப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வழக்கில் எங்கள் கருத்தை முன்வைத்தது நவம்பர் 10-ல். அதன் பின்னர் மூன்றே நாட்களில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மசோதாக்கள் 2020-ல் இருந்தே கிடப்பில் உள்ளன. அப்படியென்றால் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார். மூன்றாண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஏன் ஆளுநர்கள் காத்திருக்க வேண்டும்?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினவினர்
அப்போது, ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக் காத்திருப்பதாகக் கூறி வழக்கை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நிலங்களை அளக்க இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதி: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இப்புதிய சேவையின் மூலம், நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வட கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: "அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தட்டம்மை இறப்பு 43% அதிகரிப்பு: தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததால் 2021 முதல் 2022 வரை உலகளாவிய தட்டம்மை இறப்புகளில் 43% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது”: "தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதுகுறித்து அவர் சிகிச்சைப் பெற்று வரும் தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஐசியுவில் இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறியுள்ளார்.
‘மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் பக்கம் சாய்ந்த சாம் ஆல்ட்மேன்: இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேக் பரோக்மேன் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
“தொழிலாளர்களின் மன உறுதியை பேணுவது முக்கியம்”: சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் மன உறுதியைப் பேணுவது முக்கியம் என்று உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தராகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும், போதுமான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.
“இந்தியா பயந்து விளையாடியது என்பதை ஏற்க மாட்டேன்”: பெரிதும் எதிர்பார்த்த உலகக் கோப்பை 2023 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டி எதிர் - உச்சக்கட்டம் எய்தி ஆஸ்திரேலியா மிகச் சிறப்பாக ஆடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தொடர் முழுதும் அட்டகாசமாக ஆடி கடைசி ஆட்டத்தில் தோல்வியுற்றது பெரிய முரண். ஆனால் ‘தோல்விக்குக் காரணம் மிடில் ஓவர்களில் பயந்து பயந்து ஆடினோம் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன்’ என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
இந்திய தோல்விக்கு காரணம் என்ன?: ஊடகங்களும் முன்னாள்களும் இந்நாள்களும் இந்திய அணிதான் சாம்பியன், கோப்பையை இப்போதே கொடுத்து விடலாம் என்று பேசியும் எழுதியும் வலைதளங்களில் சொல்லாடல் மண்ணைக் கிளறி விட்டுக் கொண்டிருந்த போது இந்திய அணி மீது நாம் கடும் சுமையை ஏற்றுகிறோம், அழுத்தத்தை ஏற்றுகிறோம் இது பின்னடவை ஏற்படுத்தலாம் என்றெல்லாம் யோசிக்கவில்லையே என்ற கருத்தும் இங்கே எழுகிறது.
எல்லா எதிரணிக்கும் எதிராக ஒரே மாதிரி அட்டாக்கிங் உத்தியைக் கையாள்வது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுதான். அந்தந்த எதிரணிக்கு எதிராக அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைக்கும் உத்திகளே, திட்டங்களே கைக்கொடுக்கும் வாய்ப்பு அதிகம் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒரு புறம் பிட்ச் எல்லாம் ஒன்றுமில்லை என்று பேசிக்கொள்வது, இன்னொரு புறம் எங்களுக்கு இந்தப் பிட்ச்தான் வேண்டும் என்று கூறுவது என ஏன் இந்த இரட்டை முரண் மனநிலை? மாறாக, ஆஸ்திரேலியா முரண்களற்ற தெளிவான சிந்தனை, திட்டமிடலுடன் இறங்கி மிக அருமையாக செயல்பட்டனர் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.