

சிறுமி பலாத்கார சம்பவத்தில் சர்ச்சைக்குள்ளான பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள ‘விப்ஜியார்' தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இப்பள்ளியில் கடந்த ஜூலை 2-ம் தேதி 6 வயது பள்ளி மாணவியை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் ஜூலை 15-ம் தேதி வெளியில் தெரிந்தது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபா என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவெள்ளா கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், இப்பள்ளி கிட்டத்தட்ட 12 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் இன்று முதல் நடைபெறுகின்றன.
இன்று காலை பள்ளிக்கு ஆசிரியர்கள், குழந்தைகள் வழக்கம் போல் வந்தனர். குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்ட பெற்றோர் சிலர், பள்ளி வளாகத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தனர். பள்ளி மீது இன்னமும் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும். நிர்வாகக் குறைபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விப்ஜியார் பள்ளியில் இருந்து மாற்ற முயற்சித்து வருவதாக கூறிய பெற்றோர் ஒருவர் "அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். பள்ளி நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி அதை பெற்றோர்களுக்கு காண்பிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.