

அரசு நலத்திட்டங்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்குவதை மார்ச் 31 2018 வரை தள்ளிவைத்திருந்தாலும், பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை தெரிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இதில், எல்ஐசி காப்பீட்டு நிறுவனம் அதிக கெடுபிடி காட்டுவதாக அதன் வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. எந்த அளவுக்கு கெடுபிடி என்றால், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தங்கள் பாலிசி பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்றால்கூட அதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஓர் இணையதள சேவையைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
ஒரு வாடிக்கையாளர் தனது பாலிசி பக்கத்தை லாகின் செய்யும்போது அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் அவரால் அவரது பணப் பரிவர்த்தனை வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது.
இது குறித்து சட்ட வல்லுநர்கள், "எல்ஐசி.,யின் இந்த கெடுபிடி உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும். மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கும் எதிரானது" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த அசவுகரியம் தொடர்பாக ’தி இந்து’ (ஆங்கில) நாளிதழுக்கு எல்ஐசி வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். பிரசந்தோ கே.ராய் என்ற பாலிசிதாரர் கூறும்போது, "நான் எனது பாலிஸி தொகையை செலுத்தியதற்கான ரசீதுகளை பதிவிறக்கம் செய்தபோது எனது ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன் என்றார். இதேபோல், ஸ்டீவ் வில்பிரெட் என்ற பாலிஸிதாரரும் ஆதார் எண்னைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறினார்.
பல்வேறு வாடிக்கையாளர்களும் அதிருப்தி தெரிவித்தமையால் எல்ஐசி உயர் அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அவர் ஓரிரு நாளில் இதுகுறித்து தெளிவுபடுத்துவதாகக் கூறினார். ஆனால், அவர் பதிலேதும் தெரிவிக்கவில்லை. இதனால், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தி இந்து சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.