Last Updated : 16 Jan, 2018 09:39 AM

 

Published : 16 Jan 2018 09:39 AM
Last Updated : 16 Jan 2018 09:39 AM

குஜராத்தில் கைதான நாதுராம் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவல்: பெரியபாண்டியன் சுடப்பட்டது, கொளத்தூர் கொள்ளை வழக்குகள் பதிவாகவில்லை

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளைக்கு பின் ராஜஸ்தான் தப்பிவிட்ட நாதுராமை பிடிக்க சென்னை போலீஸ் படை சென்றிருந்தது. பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாரனின் ராமாவாஸ் கிராமத்தில் நண்பர் தேஜாராமின் பண்ணை வீட்டில் நாதுராம் ஒளிந்திருந்தார். இந்த வீட்டை டிசம்பர் 12-ல் சென்னை படையினர் முற்றுகையிட்டனர். நாதுராம் தனது மனைவி மஞ்சு, சக கொள்ளையன் தீபாராம் ஜாட்டுடன் தப்பி விட்டான். வீட்டில் இருந்தோர் நடத்திய தாக்குதலில் இருந்து தப்ப இன்ஸ்பெக்டர் முனிசேகர் உட்பட 4 காவலர்கள் சுவர் ஏறி குதித்தனர். பெரியபாண்டியன் வெளியே வரும்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். இது முனிசேகர் கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு என்பதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இதனால், நாதுராமை பிடிப்பதில் ராஜஸ்தான் போலீஸார் தீவிரம் காட்டினர். இதன் பலனாக அவர் சனிக்கிழமை சிக்கியுள்ளார்.

நாதுராமுடன் கைதான சுரேஷ் மேக்வால் ஜாமீனில் விடப்பட்டுள்ளார். நேற்று மாலை ஜெய்தாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாதுராம் மூன்று நாளுக்கு 18-ம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவரிடம் ஜெய்தாரன் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். நாதுராம் மீது கலவரம் தூண்டுவது, கொலைக்கான ஆயுதங்களுடன் கலவரம் செய்வது, கொலைக்கான முயற்சி, கருக்கலைப்பிற்கு காரணமாதல் மற்றும் காவல்துறையை பணி செய்ய விடாமல் தாக்குதல் நடத்தி தடுத்தது ஆகிய குற்றங் களுக்காக ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. பலியான பெரியபாண்டியன் சம்மந்தப்பட்ட வழக்கு எதுவும் நாதுராம் மீது பதிவாகவில்லை. அவர் பாலி காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு மட்டுமே பதிவாகி உள்ளது. கொள்ளை சம்பவம் சென்னை யில் நடைபெற்றதால் அதன் மீதான வழக்கையும் ஜெய்தாரன் போலீஸார் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜெய்தாரன் ஆய்வாளர் பவர் லால் கூறும்போது, ‘பாலி போலீஸாரின் கடும் முயற்சியால் நாதுராம் சிக்கியுள்ளான். சுரேந்தர் நகரில் அவனுக்கு அடைக்கலம் அளித்ததாக சுரேஷ் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இவருக்கு கொள்ளை உட்பட வேறு எந்த வழக்கிலும் சம்பந்தம் இல்லை. பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நாதுராம் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து அவனிடம் விசாரணை நடத்திய பின் முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்தனர்.

ஜெய்தாரன் பண்ணை வீட்டு சம்பவம் நடந்தபோது சென்னை படையினரை தாக்கியதாக தேஜாராம், அவரது மனைவி, மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் கைதான நாதுராமின் மனைவி மஞ்சுவும் சிறைக்கு உள்ளார். கொள்ளை வழக்கில் மற்றொரு குற்றவாளியான தினேஷ் ஜாட் ஜோத்பூரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் கொள்ளை வழக்கில் இதுவரை ஏழு பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் யார் மீதும் இதுவரை பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு பதிவாகவில்லை. தீபாராம் ஜாட் மட்டும் இன்னும் கைது செய்யப்பட வேண்டி உள்ளது.

கொளத்தூர் கொள்ளை மீது சென்னை போலீஸார் பதிவு செய்த வழக்கில் நாதுராம் மீது விசாரணை நடத்தப்படும். இதற்காக சென்னை போலீஸார் 3 நாட்களுக்கு பின் ஜெய்தாரன் வந்து நாதுராமை காவலில் எடுப்பார்கள் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x