Published : 17 Nov 2023 04:26 PM
Last Updated : 17 Nov 2023 04:26 PM

கேரள செவிலிக்கு மரண தண்டனையை உறுதி செய்த ஏமன் நீதிமன்றம் - மீட்கத் துடிக்கும் தாயின் போராட்டம்

புதுடெல்லி: ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், அந்தச் செவிலியின் தாய் தன் மகளை மீட்க ஒரு நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நடந்தது என்ன? - கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது முடியாததால் ஒருமுறை அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு நிமிஷா பிரியாவை ஏமன் போலீஸார் கைது செய்தனர். அப்போதிலிருந்து நிமிஷா சிறையில் உள்ளார்.நிமிஷா தன்னை மஹ்தி துன்புறுத்தியதாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும் அதனாலேயே அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சி விபரீதமாக முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். அவர் தரப்பு நியாயத்தைக் கேட்காத ஏமன் அரசி அவருக்கு 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. அப்போதிலிருந்து அவர் சிறையில் தான் இருக்கிறார்.

இதனையடுத்து நிமிஷா பிரியாவின் தாயார் ஏமன் சென்று தன் மகளை மீட்டுவர முயற்சித்து வருகிறார். இதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவில், "அரபு நாடான ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுக் கிளர்ச்சி காரணமாக அங்கு இந்தியர்கள் செல்ல கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தடை நிலவுகிறது. இந்தத் தடையைத் தளர்த்தி தான் ஏமன் செய்ய வழிவகுக்க மத்திய அரசு உதவ உத்தரவிட வேண்டும்" என்று நிமிஷா பிரியாவின் தாயார் கோரியிருந்தார். இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்குமாறு மத்திய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் கேரள செவிலியின் மேல் முறையீட்டு மனுவை ஏமன் நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிமிஷாவின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் வாதிடுகையில், "உயிரிழந்த மஹித் குடும்பத்தினருக்கு நஷ்டயீடு கொடுத்தாவது மகளை மீட்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அதற்கு அவர் ஏமனுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு சென்றால்தான் அவர் மஹித் குடும்பத்தினருடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் இந்தியா விதித்ததுள்ள தடையால் அவரால் ஏமன் செல்ல முடியவில்லை" என்றார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், "அண்மையில் வெளியிட்ட ஓர் அறிவிக்கையில், ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்படலாம் என்றே கூறப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக குறுகிய காலத்துக்கு இந்தியர்கள் ஏமன் செல்ல அனுமதிக்கப்படும்" என்றார்.

இதனைக் கேட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், "மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தனது முடிவை அறிவிக்கட்டும்" என்று உத்தரவிட்டார். இருப்பினும் பிரியாவின் தாயார் கோரியது போல் பணத்தைப் பெற்றுக் கொண்டு சமரசம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். ஆனால், பிரியா கைதுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவலாம் என்று தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x