ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நேற்று முதல் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவம், துணை ராணுவப்படை, காவல்துறை இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டது. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்காம் மாவட்டம், டிஹெச் போரா பகுதியின் சாம்னோ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய ராணுவத்தின் 34 ராஷ்ட்ரீய ரைபில் படை, 9 பாரா எனும் சிறப்பு அதிரடிப் படை, துணை ராணுவப் படை, காவல்துறை அடங்கிய கூட்டு பாதுகாப்புப் படையினர் நேற்று அங்கு விரைந்தனர். இரு தரப்புக்கும் இடையே 2 நாட்களாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்த நிலையில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் காளி எனப் பெயரிடப்பட்டது.

இதே பகுதியில் ஏற்கனவே பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த நிலையில், சமீப நாட்களில் இரண்டாவது முறையாக அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பஷிர் அகமது மாலிக் என்ற பயங்கரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபராக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in