உ.பி. அருகே டெல்லி- சஹர்சா வைசாலி விரைவு ரயிலில் தீ விபத்து: 19 பேர் காயம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

எட்டாவா: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் எட்டாவா அருகே டெல்லி - சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயில் பெட்டி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்துக்குள்ளான ரயில் டெல்லியில் இருந்து பிஹாரின் சஹர்சாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.12 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவை நெருங்கிக் கொண்டிருந்த போது, ரயிலின் எஸ்.6 பெட்டியில் இருந்து புகை வந்ததைப் பார்த்த பயணிகள் சிலர் ரயிலில் இருந்து ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ரயில் மெயின்பூரி சந்திப்புக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.

ரயில்வே போலீஸார் (ஜிஆர்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) போலீஸாரின் ஒரு மணிநேர தீவிர முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெட்டி தனியாக பிரித்தெடுக்கப்பட்ட பின்பு காலை 6 மணிக்கு விரைவு ரயில் மீண்டும் அதன் பயணத்தைத் தொடங்கியது.

உள்ளூர் அதிகாரிகளின் தகவலின்படி, இந்தத் தீ விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 11 பேர் மேல்சிகிச்சைக்காக சாய்ஃபை மருத்துவப் பல்கலைகழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுகுறித்து ஆக்ரா ஜிஆர்பி காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா லங்கேஸ் கூறுகையில், "இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தீவிர விசாரணைக்கு பின்னர் இத்தீவிபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புதுடெல்லி - தர்பாங்கா சிறப்பு விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பயணிகள் காயமடைந்தனர். மூன்று பெட்டிகள் சேதமடைந்தன. உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா அருகே 10 மணிநேரத்துக்குள் இரண்டு ரயில்கள் தீ விபத்துக்குள்ளானது கவனம் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in