

மும்பை: சஹாரா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுப்ரதா ராய் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 75. சுப்ரதா ராய் பல மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்தார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணி அளவில் இதயக்கோளாறு காரணமாக அவர் காலமானார்.
சுப்ரதா ராய் வளர்ந்த கதை: சுப்ரதா ராய் பிஹார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் 1948-ம் ஆண்டு பிறந்தார். இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற அவர், 1976-ம் ஆண்டு சஹாரா நிதி நிறுவனத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். அந்த சமயத்தில் அந்நிறுவனம் தடுமாற்றத்தில் சென்றுகொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1978-ம் ஆண்டு, ரூ.2,000 முதலீட்டில் சஹாரா இண்டியா பரிவார் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பரிவார் என்றால் குடும்பம் என்று அர்த்தம். இதற்கேற்ப இந்திய குடும்பங்களுக்கான சிறு சேமிப்பு திட்டங்களை சுப்ரதா ராய் அறிமுகப்படுத்தினார். ரூ.10 முதல் மிக குறைந்த வைப்புத் தொகையை அந்நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். இதனால், 9 கோடி பேர் சஹாரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். சுப்ரதா ராய் பிஹாரில் பிறந்தவர் என்றாலும், அவரது நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது.
அவரது தலைமையின் கீழ் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிசஹாரா பயணித்தது. ரியல்எஸ்டேட், மருத்துவமனை, ஊடகம்,சினிமா, விளையாட்டு, போக்குவரத்து என பல்வேறு துறைகளில் கால் பதித்தார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான ‘புனே வாரியர்ஸ் இந்தியா’ சுப்ரதா ராய் வசமே இருந்தது. ரயில்வே துறைக்கு அடுத்ததாக அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக சஹாரா உருவெடுத்தது. தற்போது சஹாரா குழும நிறுவனங்களில் 12 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
தொழில் துறையில் இந்தியா வின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த சஹாரா, 2011-ம்ஆண்டில் பெரும் சட்ட நெருக்கடிக்கு உள்ளானது. இக்குழுமத்தின், சஹாரா ரியல்எஸ்டேட் கார்ப்பரேசன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன் ஆகிய இரு நிறுவனங்கள் விதிகளுக்குப் புறம்பாக மக்களிடமிருந்து நிதி திரட்டியுள்ளது என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி 2008 முதல் 2010 வரையில் மேற்கொண்ட விசாரணையில் கண்டறிந்தது.
இந்திய அளவில் இந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏனென்றால், கோடிக்கணக்கான மக்கள் அந்நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தனர். இவ்விவகாரம் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவ்விரு நிறுவனங்களும், மக்களிடமிருந்து பெற்ற ரூ.24 ஆயிரம் கோடி முதலீட்டை திருப்பி வழங்க வேண் டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு, சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். வளர்ச்சியின் உச்சத்திலிருந்தவர் வீழ்ச்சியை சந்தித்தார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2016-ம்ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங் கப்பட்டது.
ரூ.25 ஆயிரம் கோடி: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து அந்த இரு நிறுவனங்கள் வட்டியோடு செபி கணக்கில் ரூ.25,781 கோடி செலுத்தின. இந்தத் தொகையில் இருந்து ரூ.138 கோடி மட்டுமே அந்நிறுவனங்களில் முதலீடு செய்த மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. சுப்ரதா ராய் மறைந்துள்ள நிலையில், மக்களுக்கு திருப்பிச் செலுத்தப்படாமல் செபி வசம் இருக்கும் இந்தத் தொகை தற்போது பேசு பொருளாகியுள்ளது. சுப்ரதா ராய் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத் துறை பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.