

வேளாண் துறைக்கு வங்கிகள் வலுவான வகையில் உதவி அளித்துவருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
2014-15 ஆம் ஆண்டில் ரூ.8 லட்சம் கோடி வேளாண் கடன்கள் வழங்க குறியளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகள் நடப்பு நிதியாண்டில் இந்த குறி அளவை விஞ்சும் என்று ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வட்டி மானிய திட்டத்தின் கீழ் குறுகிய கால பயிர் கடன்களுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும், கடன்களை சரியான தவணையில் திருப்பி செலுத்தும் விவசாயிகள் 3 சதவீதம் ஊக்க தொகை பெறுவார்கள். 2014-15 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடரும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஊரகப் பகுதிகளிலும் வேளாண் துறையிலும் கட்டமைப்பை உருவாக்க உதவும் ஊரக கட்டமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும். வேளாண் கடன்கள் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கி இந்த நிதியத்தை செயல்படுத்துகிறது. இதற்காக மூலதன நிதியத்திற்கு கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
வேளாண் விளைப் பொருட்கள் பாதுகாக்க உதவும் வகையில் சேமிப்பு கிடங்களின் கொள் அளவு அதிகரிக்கப்படும். இதனால் விவசாயிகளின் ஈட்டும் திறன் மேம்படும். இதை கருத்தில் கொண்டு சேமிப்பு கிடங்கு வசதியை மேம்படுத்தும் வகையில் சுமார் ரூ.5,000 கோடி நடப்பு நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிரதேச ஊரக வங்கிகளுக்கு நிதி வழங்கும் வகையில் நாபார்டு வங்கியில் நீண்டகால ஊரக கடன் நிதியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இதற்கு தொடக்க மூலதனமாக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு இது உதவி அளிக்கும்.
விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கூடுதல் அளவில் கடன் வசதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் குறுகிய கால கூட்டுறவு ஊரக கடன் வசதி மற்றும் மறு நிதி உதவி நிதியத்திற்கு 2014-15 ஆம் ஆண்டில் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான நாபார்டு வங்கியின் நிதியத்திற்கு நிதி உதவியாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 2000 உற்பத்தியாளர்கள் அமைப்பை ஏற்படுத்த பயன்படுத்தப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாயை மேம்படுத்த இந்த திட்டம் வழிவகுக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.