Published : 14 Nov 2023 05:55 AM
Last Updated : 14 Nov 2023 05:55 AM

இமாச்சலில் உள்ள ராணுவ முகாமில் தீபாவளி கொண்டாடினார்: எல்லையில் வீரர்களுடன் மோடி உற்சாகம்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லெப்சா பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்.

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அவர்களிடம் பேசிய மோடி, ‘‘ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடம், எந்த ஒரு கோயிலுக்கும் குறைவானது அல்ல. நீங்கள் இருக்கும் இடமே பண்டிகைக்கான இடம்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நரேந்திர மோடி கடந்த 2014-ல்பிரதமரானது முதல் ஆண்டுதோறும் நாட்டின் எல்லையில் உள்ள ராணுவ முகாம்களுக்கு சென்று, அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம், இமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய லெப்சா பகுதியில் உள்ளராணுவ முகாமுக்கு பிரதமர் மோடிசென்றார். அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அடங்கிய வீடியோ ஆகியவற்றை பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

துணிச்சல்மிக்க வீரர்களாகிய நீங்கள் நாட்டின் எல்லைகளை காவல் காக்கும் வரை, இமயமலைபோல இந்த தேசம் பாதுகாப்பாக இருக்கும். என்னை பொருத்தவரை, ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடம், எந்த ஒரு கோயிலுக்கும் குறைவானது அல்ல. நீங்கள் இருக்கும் இடமே பண்டிகைக்கான இடம்.நமது வீரர்கள் நாட்டின் பெருமையை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இப்போது நிலவும் சூழலில், நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். நமதுதுணிச்சல் மிக்க வீரர்கள் எல்லைகளில் வலிமையான சுவர்போல விளங்குகின்றனர்.

நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின்போது மீட்பு பணியில் ஈடுபடுவது, சர்வதேச அமைதி திட்டங்களில் ஈடுபடுவது என ஆயுதப் படை வீரர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். பண்டிகை காலங்களில்கூட குடும்பத்தினரைவிட்டு விலகி இருந்து, எல்லையை காக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு நாட்டு மக்கள் மிகவும் கடன்பட்டுள்ளனர்.

நாட்டை கட்டமைக்கும் முயற்சியில் கடந்த ஓராண்டு காலம் சிறந்த மைல்கல்லாக அமைந்தது. குறிப்பாக, சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளோம். உள்நாட்டில் தயாரான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’விமானம்தாங்கி கப்பல், கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்திமுடித்துள்ளோம். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துள்ளோம். உலகின் 5-வது பெரியபொருளாதார நாடாக உருவெடுத்துள்ளோம்.

எல்லைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ராணுவம் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, ராணுவ தளவாடங்களில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன்சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் ராணுவத்தில் உள்நாட்டு தயாரிப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதனால், வரும்காலங்களில் பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை படிப்படியாக குறையும்.

ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போது நிரந்தர பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரபேல் உள்ளிட்ட போர் விமானங்களில் பைலட்டாகவும், போர்க் கப்பல்களில் அதிகாரிகளாகவும் பெண்கள் பணியாற்றுகின்றனர்.

ராணுவ வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்னுரிமை வழங்குகிறது. குறிப்பாக, மோசமான வானிலைக்கு நடுவே பணிபுரியும் வீரர்களுக்கு தேவையான உடைகள் வழங்கப்படுகின்றன. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் ரூ.90 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பாதுகாக்க நீங்கள் தொடர்ந்து பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவுடன் இந்த நாடு வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொடர்ந்து எட்டும். நாட்டின் ஒவ்வொரு தீர்மானத்தையும் நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். இவ்வாறு பிரதமர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x