ஹைதராபாத் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 4 நாட்களே ஆன சிசு உட்பட 9 பேர் உயிரிழப்பு

தீ மளமளவென வேகமாக பரவ காரணமாக இருந்த ரசாயனம் மற்றும் டீசல் பேரல்கள்.
தீ மளமளவென வேகமாக பரவ காரணமாக இருந்த ரசாயனம் மற்றும் டீசல் பேரல்கள்.
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியின் கீழ் தளத்தில் கார் மெக்கானிக் கடையில் நேற்று ஏற்பட்ட தீயில், பிறந்து 4 நாட்களே ஆன சிசு, 2 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத், நாம்பல்லி பஜார் காட் எனும் பகுதியில் 4 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் கார்களை பழுது பார்க்கும் மெக்கானிக் ஷெட் இயங்கி வந்தது.அதே இடத்தில், டீசல் மற்றும்ரசாயன பிளாஸ்டிக் பேரல்களையும் அதிகளவு சேமித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை,திடீரென இந்த மெக்கானிக் ஷெட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் ரசாயன பேரல்களில் தீப்பிடித்து மளமளவென மேலேயுள்ள அனைத்து மாடிகளுக்கும் கண் இமைக்கும் நேரத்துக்குள் பரவியது.

இதையடுத்து, மாடிகளில் வசித்து வந்த குடும்பத்தினர் பயந்து அலறி அடித்துக்கொண்டு கீழே வர முயற்சித்தனர். ஆனால், தீயுடன் கரும் புகையும் அதிகமாக வெளியேறியதால் அவர்களால் கீழே வர முடியவில்லை.

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாடியில் சிக்கி இருந்த 21 பேரைமீட்டு உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கோர விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பிறந்து 4 நாட்களே ஆன ஆண் சிசுவும் அடங்கும். இந்த தீ விபத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.

இச்சம்பவம் குறித்து போலீஸ் ஆணையர் வெங்கடேஸ்வருலு பேசுகையில், "கார் மெக்கானிக் கடையில் ஏற்பட்ட தீயால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. மேலும்,அதே கிடங்கில் யாருடைய அனுமதியும் இன்றி ரசாயனங்கள், டீசல் போன்றவை சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. அதனால்தான், தீ விரைவாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.

விபத்து குறித்து அமைச்சர் கே.டி.ராமாராவ் கூறுகையில், "நாம்பல்லியில் நடந்த கோரமான தீ விபத்து மிகவும் வருந்தத்தக்கது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in