பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது; மக்களை நசுக்குகிறது மத்திய அரசு: ப.சிதம்பரம் கடும் சாடல்

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது; மக்களை நசுக்குகிறது மத்திய அரசு: ப.சிதம்பரம் கடும் சாடல்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, மக்களை தொடர்ந்து மத்திய அரசு நசுக்கி வருகிறது. நுகர்வோர்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடன் வாங்கும் அளவு, பங்குகளை விற்பனை செய்தல்,  நிதிப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவை குறித்தும் கடுமையாக ப.சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார்.

2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்னும் 10 நாட்களில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இவ்வாறு சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது-

''மத்திய அரசு கடன் வாங்கும் அளவை ரூ. 30 ஆயிரம் கோடி குறைத்துவிட்டதாகக் கூறி வருகிறது. ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம்(எச்.பி.சி.எல்.) நிறுவனத்தின் 51.1 சதவீத பங்குகளை வாங்கியதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கிறது.

அரசு கடன் பெறுவதை குறைத்ததற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அரசுக்கு பணம் கொடுப்பதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டும் ஒன்றுதான். இதன் மூலம், ரூ. 30 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை வரத்தான் செய்யும்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மக்களை நசுக்கி வருகிறது. நுகர்வோர்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது.

மக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில், நம்மதி கிடைக்குமாறு, பெட்ரோல், டீசல் எரிபொருட்களை சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.)வரம்புக்குள் மத்திய அ ரச ஏன் கொண்டு வரக் கூடாது?.

பெட்ரோலுக்கும், டீசலுக்கும் மிகப்பெரிய அளவுக்கு உற்பத்தி வரி விதித்து மத்திய அரசு மிகப்பெரிய வரி வருவாயை அறுவடை செய்து வருகிறது. ஆனால், அந்த வருவாய் முழுவதும் தேவையில்லாமல் வீணாக செலவு செய்யப்படுகிறது''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in