

உத்தராகண்ட் சுரங்க விபத்து : 40 பேரை மீட்கும் பணி தீவிரம்: உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டு, சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், திங்கள்கிழமை மாலை வரை 21 மீட்டர் அளவுக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலையில் இது குறித்து மீட்புக் குழு தரப்பில் கூறும்போது, "தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கின்றனர். வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கம்ப்ரஸர் மூலம் அவை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ட்ரில்லிங் பணி நடைபெறுகிறது" என்று தெரிவித்திருந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 2022-ஐ விட காற்று மாசுபாடு 40% குறைவு: சென்னையில் சென்ற ஆண்டு தீபாவளி காற்றுத் தர மாசின் அளவைவிட நடப்பு ஆண்டு தீபாவளி காற்றின் மாசு அளவு 40 விழுக்காடு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளன்று காற்றுத் தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 207-ல் இருந்து 365 வரை மிக மோசமான அளவுகள் எனக் கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும், அதிகளவாக வளசரவாக்கத்தில் காற்று மாசு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை ரூ.467.69 கோடி: தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தெலங்கானாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ - 8 பேர் பலி: தெலங்கானா மாநிலம் நம்பள்ளி பகுதியின் பஜார் கார்டு பகுதியில் உள்ள கட்டிடத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையின்படி, கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டிருந்த சில கெமிக்கல் டிரம்களில் தீப்பிடித்து பரவியது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 6 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகின் மாசுபட்ட 10 நகரங்களில் ஒன்றான டெல்லி: தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் காற்றில் புகை மூட்டம் அதிகமானதால் உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி இடம் பெற்றுள்ளது. மேலும் டெல்லியுடன், கொல்கத்தாவும், மும்பையும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன. கொல்கத்தா 196 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 4-வது இடத்திலும், இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை 163 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 8-வது இடத்திலும் இருக்கின்றன.
“சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு வெளியேறும் காலம் வந்துவிட்டது”: சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு சத்தீஸ்கரில் அதன் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது. டெல்லியில் உள்ள சில ஊடக நண்பர்களும், சில அரசியல் விமர்சகர்களும் என்னிடம், முதல்வர் பூபேஷ் பாகலே கூட தோற்கலாம் என்று கூறினர்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "பிரதமர் மோடி தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்காமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
தெருவோர மக்களுக்கு உதவிய ஆப்கன் வீரர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இந்த வீடியோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே ரூ.500 பணத் தாள்களை அவர்கள் அருகில் போட்டுவிட்டுச் செல்கிறார்.
ஒரு நாள் முழுவதும் வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை: குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு நாள் முழுவதும் வீட்டினுள் பதுங்கியிருந்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவில் வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறியதாக வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்: பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சர் சுயாலா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உள்துறை அமைச்சராக இருந்து வந்த அவரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதை போலீஸார் தவறிவிட்டதாக விமர்சித்ததால் சுயாலா பிரேவர்மேன் சர்ச்சையில் சிக்கினார். அவரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்குக்கு கடுமையான அழுத்தங்கள் இருந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சுயலா நீக்கப்பட்டுள்ளார்.