Last Updated : 12 Nov, 2023 04:48 PM

2  

Published : 12 Nov 2023 04:48 PM
Last Updated : 12 Nov 2023 04:48 PM

முகலாயர் காலத்திலும் தீபாவளி - மதநல்லிணக்கத்தை காத்த அக்பர்

புதுடெல்லி: முகலாயர் காலத்திலும் தீபாவளி கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதை தம் காலத்தில் துவக்கி வைத்து மதநல்லிணக்கத்தை காத்துள்ளார் பேரரசர் அக்பர்.

இந்திய வரலாற்றை அறியும் முக்கிய ஆவணங்களாக இருப்பவை கல்வெட்டுகள். முகலாயர் காலத்தில் வரலாற்றை அறிய அவர்கள் பெர்ஷியா மொழியில் எழுதிவைத்த ஆவணங்களும், ஓவியங்களும் உதவுகின்றன. கடந்த 1526 முதல் 1857 ஆம் ஆண்டுகள் வரை இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் முகலாய மன்னர்கள். இவர்கள் விட்டுச் சென்ற ஆதாரங்களின்படி, முகலாயர் காலத்திலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

முகலாயர்களில் பேரரசரான அக்பர் தம் ஆட்சியில் முதன்முறையாக தீபாவளியை கொண்டாடத் துவங்கி உள்ளார். இதை வரலாற்று ஆய்வாளரான ஆர்.வி.ஸ்மித், மதநல்லிணக்கத்திற்காக அக்பர் இதை துவக்கியதாக தனது நூல் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் இந்துக்களின் பண்டிகையாக தீபாவளி உள்ளது. ஆக்ராவில் அக்பர் தனது செங்கோட்டையின் ரங்மெஹலில் தீபாவளி கொண்டாடி உள்ளார். இந்நன்னாளில் தன் கோட்டையை சுற்றி பலவண்ண விளக்குகளை ஏற்றியுள்ளார். சுமார் 100 கிலோ அளவிலான கடுகு எண்ணெயுடன் அகல்விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன.

ஆக்ராவின் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. ஆக்ரா, மதுரா, லக்னவ் மற்றும் போபால் ஆகிய நகரங்களின் பிரபல சமையல் கலைஞர்கள் டெல்லி கோட்டையில் விருந்துக்கான உணவுகளை தயார் செய்துள்ளனர்.

பேரரசர் அக்பருக்கு பின் ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் அனைவருமே இந்த தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்துள்ளனர். முகலாய மன்னரான ஷாஜஹான் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்றிய பின்பும் தீபாவளி கொண்டாட்டத்தை கைவிடவில்லை.

முகலாயர் காலத்தில் வாழ்ந்த பணக்காரர்களும், பெருத்த வியாபாரிகளும் தமது மாளிகைகளில் அகல்விளக்குகளை ஏற்றியுள்ளனர். முஸ்லிம்களும், சீக்கியர்களும் எண்ணெய் மற்று பஞ்சுகளை அளித்துள்ளனர். இவற்றில் அகல்விளக்குகள் பொது இடங்களிலும் நதிகளின் கரைகளிலும் ஏற்றப்பட்டுள்ளன. முகலாயர்களின் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜபர், டெல்லி செங்கோட்டையில் லஷ்மி பூசைக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

மன்னர் பகதூர்ஷா காலத்தில் செங்கோட்டை மைதானத்தில் தீபாவளி அன்று பொதுமக்கள் திரளாகக் கூடியுள்ளனர். அவர்களுக்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு மகிழ்வூட்டப்பட்டுள்ளது. தனது எடைக்கு சமமாக ஏழு வகையான தானியங்களை தீபாவளிக்காக மன்னர் பகதூர் ஷா, ஏழைகளுக்கு தானம் செய்துள்ளார். இதுபோல், வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளிக்கான காரணம் முற்றிலும் வேறு ஆகும்.

வட இந்தியாவின் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த நாளை ராமர் பெயரில் கொண்டாடுகின்றனர். ராவணனிடம் போரிட்டு வென்ற ராமர் அயோத்திக்கு திரும்பி முடிசூட்டிய நாளாகவும் தீபாவளி கருதப்படுகிறது. இதற்காக, அந்நாளில் பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீராமருக்கும் பூஜை செய்து வணங்குகின்றனர்.

ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளில் பஞ்சாங்கம் பார்த்து கொண்டாடப்படுகிறது. இந்த பஞ்சாங்கத்தை பண்டிதர்கள் பார்த்து அதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்கள். வட மாநிலங்களின் தீபாவளி முதல் நாள் ’தந்தேரஸ்’ எனும் உலோகத் திருநாளாகத் துவங்குகிறது. தந்தேரஸில் பொதுமக்கள் சந்தைகளின் கடைகளுக்கு சென்று ஏதாவது ஒரு உலோகப் பொருளை தம் வீடுகளுக்காக கட்டாயம் வாங்குவார்கள். இது, தம் வசதிக்கு ஏற்றபடி தங்க நகை முதல் வெள்ளி வரை என்றிருக்கும். இந்த பொருளை வீட்டில் வைத்து பூசை செய்கிறார்கள். இதன் மறுநாள் ’சோட்டி தீபாவளி’ (சின்ன தீபாவளி) எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், செல்வம் தரும் கடவுளாக இந்துக்கள் கருதும் லஷ்மி தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது நம்பிக்கை. எனவே, லஷ்மியை தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வரவேற்கிறார்கள். இதன் காரணமாக, வட மாநிலங்களின் கிராமம் முதல் நகரங்கள் வரை வீடுகளும், கட்டிடங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. குறிப்பாக உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, அயோத்தியில் பல லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இதில், அவர்களது சாதனையை அவர்களே முறியடித்து உலக கின்னஸில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவதில் இன்றைய நாள் முக்கிய தீபாவளி திருநாளாகும்.

இன்றைய கொண்டாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி பூசை செய்து, பட்டாசுகளையும் வெடிக்கிறார்கள். இந்த நாளில், தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு ஒருவொருக்கு ஒருவர் நேரில் சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள். அப்போது அனைவரது கைகளிலும் தவறாமல் இனிப்புகள் இருக்கும். இவற்றை தம் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பறிமாறிக் கொண்டு பெருமை கொள்வது உண்டு. நான்காவது நாள் கோவர்தன் பூசை எனவும் ஐந்தாவது நாளில் ‘பைய்யா தோஜ்’ எனும் சகோதரர்களுக்கான பண்டிகையாகவும் உள்ளது.

ரக்ஷா பந்தன் நாளில் சகோதர்கள் தம் சகோதரிகளை தேடி வந்து ராக்கி கயிறு கட்டுவதை போல், பைய்யா தோஜில், பெண்கள் தம் சகோதரர்களை தேடிச் செல்கிறார்கள். மணமான பெண்கள் கூட தம் குடும்பப் பொறுப்பை தம் கணவன்மார்களிடம் கவலைப்படாமல் ஒப்படைத்துக் கிளம்பி விடுகிறார்கள். பைய்யா தோஜில், சாலைகளில் ஓடும் வாகனங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். இடம் கிடைக்காமல் பேருந்துகளின் மேற்புறங்களிலும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக ஏறி அமர்ந்து செல்லத் தயங்குவதில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x