Last Updated : 12 Nov, 2023 06:57 AM

4  

Published : 12 Nov 2023 06:57 AM
Last Updated : 12 Nov 2023 06:57 AM

கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனம்

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா

பெங்களூரு: கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடந்த‌ சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மாநில தலைவராக இருந்த நளின் குமார் கட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் அந்த பதவியை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இதனிடையே முன்னாள் முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து தனது மகன் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தேசிய‌ அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், கர்நாடக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பெரும்பாலான தலைவர்கள், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் அவர் சார்ந்த லிங்காயத்து சாதியினர் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். கடந்த தேர்தலில் பாஜக தோற்றதற்கு அதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. எனவே எடியூரப்பாவின் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் அளித்தால், மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன் தினம் இரவு, ‘‘கர்நாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்படுகிறார்'' என அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விஜயேந்திரா தன் தந்தை எடியூரப்பாவை சந்தித்து இனிப்புகளை வழங்கி ஆசிப் பெற்றார்.

இந்நிலையில் எடியூரப்பா, ‘‘எனது மகனுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சிக்காக உழைக்க விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். வருகிற மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைத்து பாஜகவை 25 இடங்களில் வெற்றி பெற செய்வதை உறுதியாக கொண்டிருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியல்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், ''நாட்டில் பிற கட்சிகளை வாரிசு அரசியல் செய்வதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இப்போது எடியூரப்பாவின் மகனை தலைவராக அறிவித்து இருப்பதன் மூலம் பாஜகவினரே வாரிசு அரசியலில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது. கட்சியில் மிகவும் இளையவரான விஜயேந்திரா அனுபவம் குறைந்தவர். எம்எல்ஏவாக பொறுப்பேற்று 6 மாதங்களே ஆன நிலையில், பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவில் இருக்கும் மூத்தவர்களை அக்கட்சி மேலிடம் அவமதித்துள்ளது''என விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x