

பம்பை-அச்சன்கோவில் ஆறு களை தமிழகத்தில் பாயும் வைப் பாறு நதியுடன் இணைப்பது என்கிற உத்தேச திட்டத்தை கேரளம் ஒரு போதும் அனுமதிக்காது என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்திருக்கிறார்.
மாநில சட்டசபையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வியாழக்கிழமை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து முதல்வர் கூறியதாவது:
இந்த திட்டம் நதிகளை வறண்டு போகச்செய்யும். உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு பெரும் அழிவு ஏற்படுத்தும். எனவே இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான சரியான உண்மைகள், உரிய ஆவணங்களை அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.
பம்பை, அச்சன்கோவில் நதிகளில் உபரியாக தண்ணீர் இருப்பதாக தேசிய நீர் வள மேம்பாட்டு அமைப்பு தெரிவித்த கருத்து ஏற்கத் தகுந்தது அல்ல. பம்பை, அச்சன்கோவில் நதிகளில் உபரி தண்ணீர் இல்லை என்பதை டெல்லியில் உள்ள ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. எதிர்காலத்தில் இந்த நதிகளில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும் அது கணித் துள்ளது. நதிகள் இணைப்புத் திட்டத்தை மேற்கொண்டால் மாநிலத்தில் சுமார் 2004 ஹெக்டேர் பரப்பு வனப்பகுதி மூழ்கும் அபாயம் உள்ளது என்பது மிகப் பெரிதான பிரச்சினை. மேலும் நெற்களஞ்சியமாக விளங்கும் வேம்பநாடு ஏரி, குட்டநாடு பகுதிகளில் கடும் வறட்சி நிலைமை ஏற்படும்.
கேரளம், தமிழ்நாடு இடையே இந்த பிரச்சினையில் கருத் தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம் என தேசிய நீர் வள மேம்பாட்டு அமைப்பு எடுத்துள்ள முடிவையும் சபை யின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
நதிகள் இணைப்பு குறித்து இதுவரை மத்திய அரசிடம் இருந்து கேரளத்துக்கு எந்த தகவலும் வரவில்லை. நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்ப் பதாக 2003ம் ஆண்டில் மாநில சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியம். இவ்வாறு உம்மன் சாண்டி சட்டசபையில் கூறினார்.
அச்சுதானந்தன் பேசும்போது, ‘முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநிலத்துக்கு தோல்வி ஏற்பட்டதுபோல் இந்த பிரச்சினையில் ஏற்படுவதைத் தடுத்திட அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள வைப் பாறுடன் பம்பை-அச்சன்கோவில் நதிகளை இணைக்கவே மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு தீபகற்ப நதிகள் சம்பந்தப்பட்ட தேசிய நீர் மேம்பாட்டு அமைப் பின் திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கிறது’ என்றார்.