

காசா மருத்துவரின் கதறல்: காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனைகள் மீதான தங்களது ‘போர்க் குற்றங்கள்' அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று காசா மருத்துவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் 36-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், கான் யூனிஸில் உள்ள அல்-நாசர் மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, காசாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசினார். அப்போது அவர், “காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இப்போது உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்களுடைய மனசாட்சி விழித்திருக்கிறது என்றால், தயவுசெய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும். மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய போர்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முன்வராத உலகின் எந்தவொரு அரசியல்வாதியும், தன்னுடைய கரங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை மறந்துவிடக் கூடாது.
தற்போது காசா நகரில் உள்ல அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றுகையிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லை. தண்ணீரும், மின்சார வசதியும் கிடையாது. மருத்துவமனைகளின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், எங்களால் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முடியவில்லை. தற்போது போர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான போர்க் குற்றங்களை நாம் தொடர முடியாது” என்றார் வேதனையுடன்.
இதனிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “காசாவில் குழந்தைகள், பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்த நியாயமும் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்தார்.
பரமத்தி வேலூரில் 2,500 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே 2,500 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ஆன்லைன் ரம்மிக்கு எதிராக மேல்முறையீடு செய்க’ - அன்புமணி: ஆன்லைனில் ரம்மி ஆடினால், ஒரு கோடி ரூபாயுடன், ஒரு கிலோ தங்கமும் பரிசு என்று ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன. ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டை வேகம் வெளிப்படையாகத் தெரியும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பாஜக அரசு மீது சத்தீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு: மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எந்தெந்த மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இல்லையோ, அங்கெல்லாம் ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த மத்திய பாஜக முயல்கிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் குற்றம் சாட்டியுள்ளார்.
“நாட்டின் கலாச்சாரத்தை அவமதிக்கும் காங்கிரஸ்” - அமித் ஷா: காங்கிரஸ் கட்சி காலம் காலமாக நமது கலாச்சாரத்தை அவமதித்து வருகிறது. ஒருபுறம், நமது நாட்டின் கலாச்சார அடையாளங்களைப் புதுப்பிக்கும் பணியினை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். மறுபுறம், அதனை எதிர்க்கும் செயலை காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
‘தெலங்கானாவில் காங்கிரஸை வீழ்த்த மறைமுக கூட்டணி’: தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்து மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடனம்: ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால், அங்கு எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் காரணமாக, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
‘கருக்கா’ வினோத் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி ‘கருக்கா’ வினோத், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் பிணையில் வெளிவர இயலாத சூழல் உருவாகியுள்ளது.
4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் பயங்கரம்: ராஜஸ்தானின் தவுஸா மாவட்டத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர்வாசிகளின் தகவலின் பேரில் போலீஸார் அந்த நபரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் ராம்சந்திர சிங் நெஹ்ரா கூறுகையில், "கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் புபேந்திர சிங்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்படும். விரைவில் அவர் காவல் துறை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார். கூடவே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காவல் துறை உறுதுணையாக இருக்கும்" என்றார்.
இதற்கிடையில், ரஹுவாஸ் காவல் நிலையத்தை உள்ளூர்வாசிகள் முற்றுகையிட்டனர். காவல் துறைக்கு எதிராகக் கண்டனக் குரல்களையும் அவர்கள் எழுப்பினர். சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை போலீஸிடம் ஒப்படைக்கும் முன்னர் அவரை உள்ளூர்வாசிகள் அடித்துக் காயப்படுத்தியாகத் தெரிகிறது. மக்கள் ஆவேசத்துடன் இருப்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
“இந்திய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!”: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உருக்கமாக கூறியுள்ளார்.
இதனிடையே, கிரிக்கெட் வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்.