மதுராவில் பெண்கள் வென்றதில்லை: ஹேமமாலினிக்கு ‘சென்டிமென்ட்’ சிக்கல்

மதுராவில் பெண்கள் வென்றதில்லை: ஹேமமாலினிக்கு ‘சென்டிமென்ட்’ சிக்கல்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் மக்களவை மற்றும் பேரவைத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை. இந்த ‘சென்டிமென்ட்’ பாஜக சார்பில் மதுராவில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மதுராவில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், அந்த சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களே இங்கு அதிகமாக வெற்றி பெற்று வந்துள்ளனர். ஜாட் சமூகத்தை சேர்ந்த ராஷ்டிரீய லோக்தளத்தின் தலைவர் அஜித்சிங்கின் மகனான ஜெயந்த் சௌத்ரி எம்.பி.யாக உள்ளார். இவர், இரண்டாவது முறையாக மதுராவில் போட்டியிடுகிறார்.

2003-ல் சாவித்திரி சிங் என்ற தாகூர் சமூகத்து பெண் வேட்பாளர் காங்கிரஸ் சார்பிலும், 2007-ல் புஷ்பா சர்மா எனும் பிராமண சமூகத்து வேட்பாளர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு நான்காவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் பெண் வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இவருக்கும் வெற்றி பெறுவதில் ‘சென்டிமென்ட்’ சிக்கல் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மதுராவின் பாஜக செய்தி தொடர்பாளரான ராம்கிஷண் பாதக் கூறுகையில், ‘மதுராவின் மேயராக பாஜக சார்பில் மணிஷா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அருகிலுள்ள பிருந்தாவன் நகராட்சியின் தலைவராக ஒரு பெண் இருக்கிறார். இங்கு போட்டியிடும் பெண்கள் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வேட்பாளர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய பிரபலம் என்ற அந்தஸ்தும் புகழும், ஹேமமாலினிக்கு உள்ளது.’ என கூறுகிறார்.

இந்த தேர்தலில் ஹேம மாலினியை தோற்கடிக்கும் பொருட்டு அவரது பெயரில் 2 பெண் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வேட்பு மனுதாக்கலுக்கு பின் பிரச்சாரத்திற்காக வெளியில் வரவில்லை. பாஜகவின் தாமரை பூவை போல், இவர்களில் ஒருவரது சின்னம் முட்டைகோஸ் பூ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in