

ரயில்வே பட்ஜெட்டில் இன்று கட்டண உயர்வு குறித்து அவர் கூறும்போது, "கடந்த காலங்களில் புதிய திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.
புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அவையில் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அவ்வாறு அறிவித்தால், அது நெருக்கடியில் உள்ள ரயில்வே துறைக்கு அநீதி இழைப்பது ஆகிவிடும்.
ஏற்கெனவே ரயில்வே துறை மேற்கொண்டு வரும் திட்டங்களை முடிப்பதற்கே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
கவர்ச்சித் திட்டங்களும், நிர்வாக சீர்கேடும் ரயில்வே துறையை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், 3,700 கி.மீ அளவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் ரூ.41,000 கோடி செலவிட்டுள்ளது.
ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், தேவை கருதியே அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8000 கோடி வருமானம் கிடைக்கும்.
ரயில்வே துறை சவால் நிறைந்தது. சரக்கு ரயில் சேவையில் உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும் என்பதே ரயில்வே துறையின் லட்சியம். ரயில் சேவை போதுமான அளவு மக்களைச் சென்றடையவில்லை. 362 புதிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.1.82 லட்சம் கோடி தேவைப்படுகிறது" என்றார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா.