Published : 10 Nov 2023 05:06 AM
Last Updated : 10 Nov 2023 05:06 AM

பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க லஞ்சம்: திரிணமூல் பெண் எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரை

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற புகாரில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரை செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம்பெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாகதொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பல்வேறு பரிசுப் பொருட்களை மஹுவா பெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில்,விசாரணை நடத்த மக்களவை நெறிமுறை குழுவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். நெறிமுறை குழு முன்பு மஹுவா மொய்த்ரா கடந்த 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நெறிமுறை குழு உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் 500 பக்க அறிக்கை வழங்கப்பட்டது. அதில், “நாடாளுமன்ற இணையதளத்தில், தனது சார்பில் கேள்விகளை கேட்க ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை (நண்பர்)அனுமதித்ததாக மொய்த்ரா ஒப்புக்கொண்டுள்ளார். இது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது” என்றுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெறிமுறை குழுவின்ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு மக்களவை தலைவருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வரைவு அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு 6 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை அடிப்படையில், இந்த அறிக்கைஏற்கப்பட்டது. மக்களவை தலைவர்ஓம் பிர்லாவிடம் இந்த அறிக்கைஇன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கவுரும்மொய்த்ராவுக்கு எதிராக வாக்களித்துள்ளார். இவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி, பிரனீத் கவுரை காங்கிரஸ் கட்சி கடந்த பிப்ரவரியில் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி கூறும்போது, “பிரனீத் கவுர் உண்மையின் பக்கம் நிற்கிறார். இதற்காக அவருக்கு நன்றி” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x