

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை உள்ளடக்கிய அவத் பகுதியை ஆட்சி செய்தவர் நவாப் ஷுவாஜ் உத் தவுலா. அவத் பகுதியின் தலைநகராக அயோத்தியின் அருகிலுள்ள பைஸாபாத்தை அமைத்திருந்தார்.
அயோத்தியிலுள்ள இவரது 18-ம் நூற்றாண்டின் மாளிகை ‘தில்குஷா’ என்று அழைக்கப்படுகிறது. சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மாளிகையை சுற்றி நவாபின் போர் வீரர்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு அடுக்கு மாளிகை இது. இதன் ஒவ்வொரு தளத்திலும் பத்து அறைகள் உள்ளன. மாளிகையின், தரைத்தளம் நவாபின் நிர்வாக அலுவலகமாக செயல்பட்டது.
அவரது மறைவுக்குப் பிறகு இம்மாளிகையை ஆங்கிலேய அரசு தன்வசப்படுத்தியது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்த மாளிகை, மத்திய போதைபொருள் புலனாய்வு அலுவலகமாக மாற்றப்பட்டது.
இந்த மாளிகை சிதையும் நிலையில் இருந்ததையடுத்து 2012-ம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது. இந்நிலையில், இந்த மாளிகையை புதுப்பிக்கும் நடவடிக்கையை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்காக இந்த மாளிகை சீரமைக்கப்படுகிறது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை தரிசிக்க வருபவர்கள் நவாபின் மாளிகையை கண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.