உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது: பிரதமர் மோடி

சாட்னாவில் உரையாற்றம் பிரதமர் மோடி
சாட்னாவில் உரையாற்றம் பிரதமர் மோடி
Updated on
1 min read

சாட்னா(மத்தியப் பிரதேசம்): உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். மக்கள் தங்கள் வாக்குகளைக் கொண்டு இந்த அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். வாக்குக்கு இருக்கும் இந்த சக்திதான், நாட்டின் எதிரிகளின் துணிச்சலை முறியடித்திருக்கிறது.

இம்முறையும் நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அமைப்பதன் மூலம், மத்தியில் எனது கரம் வலுப்படும். உங்கள் ஓட்டு, காங்கிரஸை வெளியே தள்ளுவதாக இருக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தை எப்படி முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு எதிர்காலம் இருக்காது. எனது வாக்குறுதி மீது மத்தியப் பிரதேசம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

தற்போது நான் எங்கே சென்றாலும் அயோத்தி ராமர் கோயில் குறித்தே மக்கள் அதிகம் பேசுகிறார்கள். மகிழ்ச்சி அலை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. வீடு இல்லாத மக்களுக்கு நல்ல வீட்டினை கட்டித் தருவதில் முந்தைய காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது. எனது வாக்குறுதியின்படி, வீடு இல்லாதவர்களுக்கு நல்ல வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in