முதல்முறையாக அயோத்தியில் கூடிய உ.பி. அமைச்சரவை: முக்கிய முடிவுகளை அறிவிக்கிறார் முதல்வர் யோகி

அயோத்தி ராமர் கோயிலில் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் யோகி ஆதித்யாநாத்
அயோத்தி ராமர் கோயிலில் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் யோகி ஆதித்யாநாத்
Updated on
1 min read

அயோத்தி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்முறையாக இன்று (நவ.9) அயோத்தியில் கூடியது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 4 ஆம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக உத்தரப்பிரதேச அமைச்சரவைக் கூட்டம் அயோத்தியில் இன்று கூடி உள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் இந்த கூட்டம் தொடங்கி உள்ளது.

இதற்காக, அனைத்து அமைச்சர்களும் அயோத்திக்குச் சென்றுள்ளனர். 5 மாநில தேர்தல் பணியில் இருந்த அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து அவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டம் முதல்முறையாக அயோத்தியில் கூடுவது குறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலை்வர் பிரஜேஷ் பதக், "இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம். தீபாவளிக் கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. நாங்கள் மிகப் பெரிய சாதனை படைக்க உள்ளோம். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச கேபினெட் அமைச்சர் நந்தகோபால் நந்தி கூறுகையில், " இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இதனை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். வரும் காலங்களில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்" எனக் குறிப்பிட்டார். முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யாநாத், தனது அமைச்சரவையுடன் சென்று அயோத்தியில் உள்ள அனுமர் கோயிலில் வழிபாடு செய்தார். இதனையடுத்து, அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று அங்கும் அவர்கள் வழிபட்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in