

தனியார் பள்ளியின் வகுப்பில் தாய்மொழியான தெலுங்கில் பேசிய மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தெலங்கானா-ஆந்திராவின் கூட்டுத் தலைநகரமான ஹைதராபாத் எர்ரகட்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆங்கில பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 45 மாணவர்கள், ஆசிரியை வகுப்பில் இல்லாத போது, தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வகுப்பறையில் நுழைந்த ஆசிரியை தனுஜா, கோபமடைந்து, தெலுங்கில் பேசிய 45 மாணவ, மாணவியரை வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் உள்ளங்கைகளில் விளாசி உள்ளார்.
இதுகுறித்து பிள்ளைகள், தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுது, இனி அந்த பள்ளிக்கு செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர். பின்னர், பெற்றோர் அந்த பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
அதற்குள் ஊடகங்களில் இந்த செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து, சிறுவர்கள் உரிமை சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், அந்த பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தின.
பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கு மொழி அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.