Published : 09 Nov 2023 06:54 AM
Last Updated : 09 Nov 2023 06:54 AM

மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த பேச்சால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் நிதிஷ் குமார், மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 4.2-லிருந்து 2.9 ஆக குறைந்திருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் படித்த பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது (கொச்சையான வார்த்தைகளில்) என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நிதிஷ் குமார் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக பேரவையில் இருந்த பாஜக பெண் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.

இதுகுறித்து, துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “முதல்வர் நிதிஷ் குமாரின் கருத்து பாலியல் கல்வி தொடர்பானதுதான். பாலியல் கல்விகுறித்து பொதுமக்கள் பேசத் தயங்குகின்றனர். ஆனால், இதுகுறித்துபள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. இதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றார்.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கூறும்போது, நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நித்யானந்த் ராய் கூறும்போது, “நிதிஷ் குமார். பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. இதை நியாயப்படுத்தும் வகையில் துணை முதல்வர் தேஜஸ்வி தெரிவித்த கருத்தும் கண்டிக்கத்தக்கது. நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்” என்றார்.

இந்நிலையில், நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனினும் என்னுடைய வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கல்வி மிகவும் அவசியம் என்பதை எப்போதும் கூறி வந்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் அவர்கள் மேம்பாட்டுக்காகவும் நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்: மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசும்போது, “ஒரு அரசியல்வாதி (நிதிஷ் குமார்) இண்டியா கூட்டணிக்கு கொடி தூக்குபவராக உள்ளார். இவர் சட்டப்பேரவையில், பெண்கள் குறித்து கற்பனை செய்ய முடியாத வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பெண்களை இழிவாக பேசிய அவரது கருத்துக்கு இண்டியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சித் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. பெண்கள் குறித்து இதுபோன்ற எண்ணம் கொண்டவர்கள் உங்களுக்கு நல்லது செய்வார்களா?” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x