

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று தெரிவித்தார்.
இதனிடையே, சிபிஐ விசாரணையை வரவேற்பதாக மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் மேலும் கூறுகையில், “ரூ.13,000 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் தொடர்பாக அதானியிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். பிறகு இங்கு வந்துஎனது காலணிகளை அவர்கள்எண்ணலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியின் உத்தரவின் பேரில் கவுதம் அதானியை குறிவைத்து மக்களவையில் கேள்வியெழுப்ப மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்திவருகிறது. இந்த குழு விசாரணையில் பங்கேற்ற மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும் நெறிமுறைக் குழு தலைவர் அநாகரீகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.
ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.