ஹரியாணா மின் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

ஹரியாணா மின் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

Published on

ஹரியாணா மாநில மின் துறை அமைச்சராக இருந்த அஜய் யாதவ் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் ஒரு தொகுதியில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பின்னரும் மாநில தலைமை திருந்துவதாகத் தெரியவில்லை. பல்வேறு கமிஷன்களில் சர்ச்சைக்குரிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வளர்ச்சிப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேம்பாட்டுத் திட்டப் பணிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் யாராவது ஒருவர் பூனைக்கு மணி கட்ட வேண்டும். எனவே முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை அவருக்கு முறைப்படி அனுப்பி வைத்துள்ளேன்.

சோனியா காந்திதான் எனது தலைவர். கடைசி வரை காங்கிரஸில் இருப்பேன். கட்சியின் தோல்வி குறித்து அந்தோனி குழுவிடம் ஏற்கெனவே விவரித்துள்ளேன். இந்த விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

55 வயதாகும் அஜய் யாதவ், ரேவரி தொகுதியில் இருந்து 6 முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in