குருகிராம் | பேருந்தில் தீ விபத்து: 2 பேர் பலி
குருகிராம்: ஹரியாணா மாநிலம் குருகிராம் நகரில் புதன்கிழமை இரவு 9 மணி அளவில் வால்வோ பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இதில் பயணித்த 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இந்தப் பேருந்து ஜெய்ப்பூர் நகரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி சென்றுள்ளது. அப்போது குருகிராம் வந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கி இந்தப் பேருந்தில் சுமார் 20 பேர் இருந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இதனை காவல் உதவி ஆணையர் வருண் தஹியா தெரிவித்துள்ளார். பேருந்தில் தீ பற்றியதற்கான காரணம் குறித்த விவரம் கண்டறியப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக குருகிராம் - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சிலர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறி தப்பி உள்ளனர்.
