தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநில முதல்வரும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான கே.சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்ய சென்ற ஹெலிகாப்டரில் நேற்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டர் உடனடியாக தரையிறக்கப்பட்டு சந்திரசேகர ராவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகள் இம்முறை தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளன. ஆதலால், பிரச்சாரம் களை கட்டி வருகிறது.

இந்நிலையில், நேற்று சித்திப்பேட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேவரகத்ரா எனும் ஊரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் சந்திரசேகர ராவ் கிளம்பினார். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சாதுர்யமாக செயல்பட்ட பைலட் உடனடியாக ஹெலிகாப்டரை மீண்டும் பண்ணை வீட்டிலேயே தரையிறக்கினார்.

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து வேறொரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதில் சந்திரசேகர ராவ் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இதன் காரணமாக தேவரகத்ராவில் தேர்தல் பிரச்சார கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in