Published : 14 Jan 2014 01:14 PM
Last Updated : 14 Jan 2014 01:14 PM

பிரதமர் பதவிக்கு நான் தயார்: மனம் திறந்த ராகுல் காந்தி

"காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் சிப்பாய், காங்கிரஸ் கட்சியின் உத்தரவுகளுக்கு எப்போதுமே கீழ்படிந்து நடப்பேன்" என பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி கூடுகிறது. இதில், பிரியங்காவை தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபடுத்துவது, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில், டைனிக் பாஸ்கர் என்ற இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அவர் முன் நிறுத்தப்படுவது குறித்து விரிவாக பேட்டி அளித்துள்ளார்.

அதில்: "கட்சி உத்தரவுகளுக்கு கீழ் படிவேன். இது வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் நான் என்ன மாதிரியான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என பணித்ததோ அவற்றை ஏற்ற சிறப்பாகவே பணியாற்றியுள்ளேன். எந்த முடிவாக இருந்தாலும் அதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்" என தெரிவித்துள்ளார்.

அதிகாரம் விஷமா?

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் "பதவி அதிகாரம் என்பது விஷம்" நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்றப்பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்" என்று உணர்ச்சி பூர்வமாக பேசியிருந்தார் ராகுல் காந்தி.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், பதவி அதிகாரம் என்பது விஷம் தான் எப்போது என்றால் பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது, என தெரிவித்தார். மேலும், அதிகாரத்தை பொது நலத்திற்காக பயன்படுத்தாமல் சுய நலத்துக்காக பயன்படுத்தினால் அது விஷமாகும் என்றார்.

காங்கிரஸ் ஆட்சி அவசியம்:

பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை தன் குடும்பத்தினருக்கு எப்போதுமே இருந்ததில்லை என தெரிவித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது என்றார்.

தேச நலனை கருத்தில் கொள்ளும்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம். இதற்காக காங்கிரஸ் கட்சி என் மீது எத்தகைய பொறுப்பை சுமத்தினாலும் அதனை முழு மூச்சோடு செயல்படுத்துவேன், என கூறினார்.

ஜனநாயக முறைப்படி வாக்களர்கள் நாட்டின் பிரதமராக யார் வர வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பாஜக மீது தாக்கு:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து எழுந்துள்ள அலை குறித்த கேள்விக்கு: "காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைக்க வேண்டும் என பாரதீய ஜனதா பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் இந்த தேசத்தின் மீது மரபணு போன்றது. அப்படி இருக்கும் போது இதனை எப்படி சாத்தியமாகும். பல ஆண்டுகளாக நாட்டு மக்களை ஒருங்கிணைத்து வைத்திருப்பது காங்கிரஸ் என்ற அரசியல் சக்தியே என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். பாஜக ஒரு தனி நபரை பிரபலப்படுத்தி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது. 120 கோடி மக்களின் எதிர்காலத்தை ஒரு தனி நபர் என்ன நினைக்கிறாரோ என்ற அடிப்படையில் நிர்ணயிக்க முடியாது" என தெரிவித்தார்.

'பிரியங்காவும் தீவிர அரசியலும்'

அவரது சகோதரியும், காங்கிரஸ் உறுப்பினருமான பிரியங்கா காந்தி விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவார், தேர்தலில் கூட போட்டியிடக் கூடும் என வெளியான தகவல் குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த ராகுல்: " பிரியங்கா என் சகோதரி மட்டுமல்ல சிறந்த தோழியும் கூட. தவிர அவர் காங்கிரஸ் கட்சியின் ஒரு துடிப்பான உறுப்பினர். அதனால் தான் அவர் கட்சிக்கும் எனக்கும் பலம் சேர்க்கும் வகையில் சில காரியங்களை செய்கிறார். இதனாலேயே அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும்" என்றார்.

மேலும், 2004, 2009 தேர்தல்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து குறைவாகவே மதிப்பிடப்பட்டது. அதே போல் தான் இந்த முறையும் காங்கிரஸ் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் சோபிக்கும் என முழு நம்பிக்கை இருக்கிறது என இறுதியாக தெரிவித்தார்.

"இளவரசர்" அல்ல...

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படலாம் என்ற சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் துவங்கியவுடனே பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி ராகுலை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.

ராகுலுக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது, அவர் செழிப்பாக வாழ்பவர் என பல பொதுக் கூட்டங்களில் விமர்சித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தியை, "இளவரசர்" (இந்தியில்-shahzada) என்றே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் குடும்ப அரசியலின் வாரிசு, இளவரசர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மறுக்கும் வகையில் ராகுல் காந்தி தான் ஒரு 'காங்கிரஸ் சிப்பாய்' என தன்னை அடையாளப் படுத்த முயன்றுள்ளார் என அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

ராகுல் தலைமையில்...

பிரதமர் பதவிக்கு தயார், என ராகுல் காந்தி மனம் திறந்து தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையின் கீழ் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம் என மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி ஒரு இயல்பான தலைவர் என்றும், இதனை காங்கிரஸ் கட்சி பலமுறை தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற முடிவு கட்சி மூத்த தலைவர்களுடனான தகுந்த ஆலோசனைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் தான் எடுக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x